தனிப்பட்ட ஒருவரது நடவடிக்கையின் விளைவாக, பல நேரங்களில், மொத்த குடும்பமும் அதன் தாக்கத்தை எதிர்கொள்ள நேரிடும். அதுபோல, சமூகத்தில் எங்கோ, எவரோ செய்யும் ஒரு செயல், அதில் சம்பந்தம் இல்லாத பலரது வாழ்விலும் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தும்.
அவ்வாறு, சிங்கம்பட்டி ஜமீன் குடும்பத்தில் நடந்த இரு நிகழ்வுகள், துளி அளவும் தொடர்பில்லாத 10,000க்கும் அதிகமான குடும்பங்களின் வாழ்வில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த இரு நிகழ்வுகளே சிங்கம்பட்டி குரூப்பில் அமைந்திருக்கும் மாஞ்சோலை எஸ்டேட் பகுதியின் வரலாற்றை இயற்றின.
1700களின் துவக்கத்தில், இன்றைய கேரள மாநிலத்தில் இருக்கும் அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடைபெற்ற அரியணை போராட்டத்தில், `எட்டு வீட்டில் பிள்ளைமார்’ (எட்டு வீடுகளின் பிரபுக்கள்) என்ற குழுவினர் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினர். அவர்களிடம் ஆட்சியை இழந்ததுடன், தனது உயிருக்கும் அச்சுறுத்தல் இருந்த காரணத்தால், அப்போது இளவராக இருந்த அரச வாரிசான சேரன் மார்த்தாண்டவர்மன், தனது தாயார் இராணி உமையம்மாவின் பாதுகாப்பில் காட்டுக்குள் தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.
அந்த சமயத்தில், அவர்களுக்கு காட்டின் மறுபகுதியில் அமைந்திருக்கும் கல்லிடைக்குறிச்சிக்கு அருகே உள்ள `சிங்கம்பட்டி” ஜமீன்தாரின் அறிமுகம் கிடைத்தது. வேல்கம்பு வீச்சிலும், குதிரையேற்றத்திலும் திறன்படைத்த சிங்கம்பட்டி ஜமீன் உதவியோடு, பெரும்படையுடன் சென்று போரிட்டு, 1730ல் ஆட்சியை மீண்டும் கைப்பற்றினார் மார்த்தாண்டவர்மன்.
தனது வெற்றிக்கு உதவியதற்காகவும், அந்த போரில் சிங்கம்பட்டி ஜமீன்தார் தனது வாரிசான இளைய ஜமீன் `நல்லபுலிக்குட்டி’யை இழந்ததற்காகவும், மேற்குத்தொடர்ச்சி மலையில் தன் கட்டுப்பாட்டின் கீழிருந்த தற்போதைய திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்தில் அமைந்திருக்கும் 74,000 ஏக்கர் வனப்பகுதியை, சிங்கம்பட்டி ஜமீன்தாருக்கு கொடையாகக் கொடுத்திருக்கிறார் மன்னர் சேரன் மார்த்தாண்டவர்மன்.
அன்றிலிருந்து அந்தப் பகுதியானது `சிங்கம்பட்டி எஸ்டேட்’ என்று அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டது. பெரும் நிலம் சொந்தமாகக் கிடைத்ததன் மூலம், தென்தமிழகத்தில் செல்வந்தர்களில் ஒருவராகவும், அதிகார மையமாகவும் மாறியது சிங்கம்பட்டி ஜமீன். மதுரை நாயக்கர்கள் உருவாக்கிய 72 பாளையங்களில் ஒன்றான சிங்கம்பட்டி, அதில் 24 பாளையங்களை தனது கட்டுக்குள் வைத்திருந்தது.
15.10.1919 நள்ளிரவு
அப்போதைய மெட்ராஸில் ஒரு கொலை நடக்கிறது. கொலை செய்யப்பட்டவர், ஆங்கிலேயரான கிளமண்ட் தியோடர் ரெட்க்ளிஃப் ஒல்ட்ரிட்ஜ் டி லா ஹே. கொலைக்குற்றம் சுமத்தப்பட்டவர்கள், சிங்கம்பட்டி ஜமீனின் வாரிசான `தென்னாட்டுப்புலி’ நல்லகுட்டி சிவசுப்ரமணிய சங்கர தீர்த்தபதி மற்றும் கடம்பூர் ஜமீனின் வாரிசான சீனி வெள்ளாள சிவசுப்ரமணிய பாண்டிய தலைவர் என இருவர்.
கொலை நடந்த இடம் – அரசர்கள், ஜமீன்கள், உள்ளிட்ட பெரும் செல்வந்தர்களுக்கும், சமூகத்தில் பெரும் செல்வாக்கு படைத்தவர்களின் வாரிசுகளுக்காகவும் மட்டுமே உருவாக்கப்பட்ட `நியூயிங்டன் கல்லூரி’. (தற்போதைய தேனாம்பேட்டை ஜெமினி பாலம் அருகே இருந்துள்ளது)
ஜமீன் வாரிசுகளும், இளவரசர்களும் மட்டுமே அங்கு படித்து வந்த காரணத்தால், `இராஜகுமாரர்களின் கல்லூரி’ என அடையாளம் கொள்ளப்பட்ட அந்தக் கல்லூரியின் துணை முதல்வர்தான், கொலை செய்யப்பட்ட டி லா ஹே. அந்த கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் சமூகத்தில் பெரும் செல்வாக்கு பெற்றவர்கள் என்பதாலும், அந்த கல்லூரியில் தற்போதைய தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதி ஜமீன்களும், அந்த வளாகத்திலேயே தங்கியிருந்து படித்து வந்ததாலும், அந்த வழக்கு பிரபலமானது.
சிங்கம்பட்டி ஜமீனுக்காக, வழக்கறிஞர் `தலசேரி’ தாமஸ் ரிச்மண்ட், கடம்பூர் ஜமீனுக்காக வழக்கறிஞர்கள் சுவாமிநாதன், எத்திராஜ் உள்ளிட்டோர் ஆஜரானார்கள். சிங்கம்பட்டி ஜமீன் கொலைக்குற்றத்தை ஒப்புக்கொண்டு, அப்ரூவராக மாறி, கடம்பூர் ஜமீன்தான், அந்த கொலையைச் செய்தார் என நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனால், பொதுமக்கள், பத்திரிகைகள், நீதிபதிகள், ஆட்சியாளர்கள் என ஒட்டு மொத்த பார்வையும் கடம்பூர் ஜமீனுக்கு எதிராகத் திரும்பியது.
அந்த வழக்கில் கடம்பூர் ஜமீனுக்கு எதிராக ஒரு வியூகம் அமைக்கப்படுவதை உணர்ந்த அவரது வழக்கறிஞர் சுவாமிநாதன், “இந்த வழக்கு மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் நடந்தால், கூட்டு மனசாட்சியின் அடிப்படையில் எனது கட்சிக்காரருக்கு எதிராக முடியும்” என்பது உள்ளிட்ட பல காரணங்களை முன்வைத்து, வழக்கு விசாரணையை பம்பாய்க்கு மாற்றிட மனு செய்தார். அதன்படி, வழக்கு பம்பாய் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதனால், நாடு முழுமைக்கும் பேசப்படும் பிரபல வழக்காக அந்த கொலை வழக்கு மாறியது. அங்கு கடம்பூர் ஜமீனுக்காக பார்ஸி இனத்தவரான வழக்கறிஞர் ஆர்.டி.என். வாடியா ஆஜரானார்.
ஆங்கிலேயரான டி லா ஹே தனது கல்லூரியில் படித்த மாணவர்களை, `கருப்பர்கள்’, `தமிழ் பார்பேரியன்ஸ்’ என்றெல்லாம் இனவெறியுடன் அழைப்பார். அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வார். அதில் கடுமையாக பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிங்கம்பட்டி ஜமீனும், கடம்பூர் ஜமீனும். அதன் காரணமாக தான் கொலை செய்தார்கள் என்று ஒரு வாதம் வைக்கப்பட்டது.
அதுபோல டி லா ஹே வின் மனைவியான டாரதி மேரி ஃபிலிப்ஸ் -க்கும் அந்த கல்லூரியில் பயின்ற மாணவர்கள் உட்பட, ஆட்சியில் இருந்த பல அதிகாரிகளுக்கும் தகாத உறவு இருந்ததன் காரணமாகவே அந்த கொலை நடந்தது என்று மற்றொரு வாதமும் வைக்கப்பட்டது. அதனால் தான் டி லா ஹேவின் மனைவி, கொலை நடந்த சில நாட்களுக்குள், அவரது நாட்டுக்குச் சென்றுவிட்டார் என்றும், அதனாலேயே அவர் பம்பாயில் வழக்கு விசாரணையின் போது ஆஜராகி சாட்சியம் அளிக்கவில்லை என்றும் பேசப்பட்டது.
ஆனாலும், வழக்கு விசாரணையின் இறுதியில், கடம்பூர் ஜமீனும் சிங்கம்பட்டி ஜமீனும் பம்பாய் உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்கள். ஆண்டுகள் 100 கடந்த பிறகும், டி லா ஹேவை கொலை செய்தது யார்? என்று இதுநாள் வரையிலும் மர்மமாகவே இருக்கிறது.
அந்தக் கொலை வழக்கில் இருந்து, 16 வயதேயான தன் வாரிசைக் காப்பாற்றிட சிங்கம்பட்டி ஜமீன் பெரும் தொகையை செலவழிக்க வேண்டியிருந்தது. (1919-1920ஆம் ஆண்டில் நடந்த அந்த வழக்குக்காக ரூ.3,00,000/-க்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அன்றைய காலத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூபாய் 19.95 தான்). அவ்வாறு செலவான தொகையை, ஆறு ஆண்டுகள் கடந்தும் ஜமீனால் ஈடு செய்ய இயலவில்லை.
பொருளாதார நெருக்கடிக்குள்ளான சிங்கம்பட்டி ஜமீன்தார், வாடியா குரூப்பிற்கு சொந்தமான தி பாம்பே பர்மா டிரேடிங் கார்பரேசன் (பி) லிமிடெட் (The Bombay Burmah Trading Corporation (P) Limited) (பிபிடிசி) என்ற தனியார் நிறுவனத்துடன் 18.01.1927 அன்று ஒரு உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டார்.
(இந்த வாடியா குரூப்பின் தற்போதைய உரிமையாளர், பிரிட்டானியா, பாம்பே டையிங், கோ ஏர் விமானம் உள்ளிட்ட பல பிரபலமான நிறுவனங்களின் உரிமையாளரும், பாகிஸ்தானின் முதல் அதிபர் முகமதலி ஜின்னாவின் பேரனுமான மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஃபார்ஸி இனத்தவரான நுஸ்லே வாடியா ஆவார்.
அந்த உடன்படிக்கையின் தொடர்ச்சியாக, சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் சேரன் மார்த்தாண்டவர்மனிடம் இருந்து வெகுமானமாகக் கிடைத்த மேற்கண்ட வனப்பகுதியில், 8373.57 ஏக்கர் நிலத்தை, 12.02.1929 அன்று, 99 ஆண்டு குத்தகைக்கு சிங்கம்பட்டி ஜமீன்தார், பிபிடிசி நிறுவனத்திற்கு வழங்கினார். அதற்கு ஈடாக ரூ.2,93,074.52/-ஐ பிபிடிசி நிறுவனத்திடம் இருந்து சிங்கம்பட்டி ஜமீன்தார் பெற்றுக் கொண்டார்.
ஆண்டுக் குத்தகையாக, முதல் ஐந்து ஆண்டிற்கு, ஏக்கர் ஒன்றுக்கு 8 அணாவும், ஐந்தாம் ஆண்டிலிருந்து ஏக்கர் ஒன்றுக்கு 1 ரூபாய் 12 அணாவும் குத்தகையாக நிர்ணயிக்கப்பட்டது. சமீப காலம் வரையிலும் இந்தத் தொகையைத்தான் பிபிடிசி குத்தகைத் தொகையாக செலுத்தி வந்தது.
அந்த குத்தகை நிலத்தில் தான், மணிமுத்தாறு, காரையாறு மற்றும் பாபநாசம் அணைப்பகுதிகளுக்கு மேல் அமைந்திருக்கும் வனப்பகுதியில் 3350 முதல் 4920 அடி வரையிலான உயரத்தில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து மற்றும் குதிரைவெட்டி ஆகிய எஸ்டேட்டுகளை பிபிடிசி நிறுவனம் உருவாக்கியது.
எஸ்டேட் தொடங்கி பத்தொன்பது ஆண்டுகள் கழித்து, நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, 1948ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மெட்ராஸ் எஸ்டேட் (ஒழிப்பு மற்றும் இரயத்துவாரிக்கு மாற்றுதல்) சட்டத்தின்படி, மாஞ்சோலை உள்ளிட்ட வனப்பகுதியை சிங்கம்பட்டி ஜமீன்தாரிடமிருந்து 19.02.1952ல் தமிழ்நாடு அரசு எடுத்துக்கொண்டது.
அந்த சூழலில், மேற்கண்ட குத்தகை முன்பு போலவே தொடர்ந்திட, ஏற்கெனவே கிடைத்த நிலத்தில், அதுநாள் வரையிலும் பிபிடிசி நிர்வாகம் பயன்படுத்தியிருந்த நிலம் போக மீதமிருந்த 4182.57 ஏக்கர் நிலத்தைத் தொடர்ந்து வனமாகவே வைத்திருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு நிபந்தனை விதித்தது. அதனை அவ்விதமே ஏற்றுக்கொள்வதாக பிபிடிசி நிர்வாகமும் ஒப்புக்கொண்டது. அதனால் மீதமுள்ள குத்தகை காலத்திற்கும் எஸ்டேட் பகுதிகளை பயன்படுத்திக்கொள்ள, பிபிடிசி நிர்வாகத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. அதன் காரணமாய் சுமார் 100 ஆண்டுகளாய் எஸ்டேட் தொடர்ந்து இயங்கி வருகிறது.
இப்படியாக, ஒரு வாரிசைப் போர்க்களத்தில் இழந்ததன் மூலமாகக் கிடைத்த சொத்தின் பெரும்பகுதியை, இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு, கொலை வழக்கில் சிக்கிக்கொண்ட மற்றொரு வாரிசைக் காப்பாற்றிட, கைமாற்றப்பட்ட இடத்தில்தான் தற்போதைய மாஞ்சோலை எஸ்டேட் பகுதிகள் உருவாக்கப்பட்டன.
படங்கள் : மாஞ்சோலை செல்வகுமார்