வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் கைது செய்யப்படுகிறார் என்ற தகவல் வெளியான நிலையில் அவர் கைது செய்யப்படுவது போன்ற போலியான புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தன்னுடனான பாலியல் தொடர்பை மறைக்க அமெரிக்கா மாடல் ஸ்டோமி டேனியல்ஸ்க்கு ட்ரம்ப் 1,30,000 டாலர் வழங்கி இருந்ததாக கூறப்பட்டு வரும் குற்றச்சாட்டில் ட்ரம்ப் விரைவில் கைதாவார் என்று செய்திகள் வெளியாகின.இந்த நிலையில் தன் மீதான குற்றச்சாட்டை ட்ரம்ப் தொடர்ந்து மறுத்து வந்தார். எனினும் ட்ரம்ப் உறுதியாக கைதாவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் போலீஸார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நியூயார்க், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சலீஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஒருவேளை போலீஸாரால் ட்ரம்ப் கைது செய்யப்பட்டால் அந்த நிகழ்வுகள் எவ்வாறு இருக்கும் என்பதை விளக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளன.
இந்தப் படங்கள் போலியானது என்றாலும் அது தத்ரூபமாக உருவாக்கப்பட்டிருந்ததால் இணையவாசிகள் பலரும் குழப்பம் அடைந்திருக்கிறார்கள்
முன்னதாக, அமெரிக்காவில் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ட்ரம்ப் தோல்வி அடைந்தார். ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார்.
ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக ட்ரம்ப் குற்றஞ்சாட்டினார். அத்துடன் பல மாகாணங்களில் வழக்கும் தொடுத்தார். அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதற்கிடையில், அமெரிக்காவின் பல பகுதிகளில் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் கலவரமாக வெடித்தது. இது அமெரிக்க வரலாற்றில் பெரும் கரும்புள்ளியாக மாறியது நினைவுகூரத்தக்கது.