புதுடெல்லி: தொழிலதிபர் அதானி, ராகுல் காந்தி மன்னிப்பு விவகாரம் தொடர்பாக நாடாளுன்றத்தின் 2 அவைகளிலும் 7-வது நாளாக நேற்றும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து இரு அவைகளும் நாளை காலை வரை (மார்ச் 23) வரை ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு கடந்த 13-ம் தேதி தொடங்கியது. தொழிலதிபர் அதானி குழும முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு (ஜேபிசி) உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்களும், இந்தியாவை அவமானப்படுத்திய விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளும் பாஜக எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தின் 2 அவைகளிலும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதனால் ஏற்பட்ட அமளியால் கடந்த 6 நாட்களாக நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபையின் மைய பகுதிக்கு வந்து கோஷமிட்டனர்.
அதேபோல் ராகுல் காந்தி விவகாரத்தை எழுப்பி ஆளுங்கட்சி எம்.பி.க்கள் கோஷமிட்டனர். இதன் காரணமாக அவையை பிற்பகல் 2 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். பின்னர் பிற்பகல் 2 மணிக்கு அவை கூடியபோது அமளி தொடர்ந்ததால் அவையை மார்ச் 23-ம் தேதி காலை 11 மணி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார். இதேபோல் மாநிலங்களவைவுயம் ஒத்தி வைக்கப்பட்டது. இன்று (மார்ச் 22) தெலுங்கு,கன்னட வருடப்பிறப்பு தினமாதலால் நாடாளுமன்றத்துக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி கடிதம்: மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு ராகுல் காந்தி நேற்று எழுதிய கடிதத்தில், “மக்களவையில் மூத்த அமைச்சர்கள் என்மீது சுமத்திய முற்றிலும் அடிப்படையற்ற மற்றும் நியாயமற்ற குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க அனுமதி அளிக்குமாறு கடந்த 17-ம் தேதி உங்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன். இக்கோரிக்கையை நான் மீண்டும் உங்கள் முன்வைக்கிறேன். மக்களவை அலுவல் நடத்தை விதி 357-ன் கீழ் அனுமதி அளிக்க வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.
அவையில் எந்தக் கேள்வியும் இல்லாதபோதும் சபாநாயகரின் அனுமதியுடன், உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் விளக்கம் அளிக்க இந்த விதி அனுமதி அளிக்கிறது. ஆனால் இந்த விஷயத்தில் விவாதத்திற்குரிய எந்த விஷயத்தையும் முன்வைக்க முடியாது, எந்த விவாதமும் எழாது என்று அந்த விதியில் கூறப்பட்டுள்ளது.