முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா மாநாடு திருவாரூரில் ஜூன் 3 தேதி நடைபெற உள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், துணை பொதுச் செயலாளர்கள் மற்றும் திமுகவின் 72 மாவட்ட செயலாளர்கள் உட்பட கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா வரும் ஜூன் 3 ஆம் தேதி கொண்டாடப்படுவது குறித்த இந்தக் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, ஜூன் 3 ஆம் தேதி திருவாரூரில் நூற்றாண்டு தொடக்க விழா மாநாடு நடைபெற உள்ளது. இந்த தொடக்க விழா மாநாட்டில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் அகில இந்திய தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர்.
திருவாரூரில் கட்டப்பட்டு வரும் கலைஞர் கோட்டம் அருங்காட்சியகத்தை அகில இந்திய தலைவர்கள் திறந்து வைக்க இருக்கிறார்கள். திமுகவில் ஏற்கனவே ஒரு கோடி உறுப்பினர்கள் இருக்கக்கூடிய நிலையில், மேலும் கட்சியை வலுப்படுத்த ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க உடன்பிறப்புகளாய் இணைவோம் என்ற இயக்கத்தை ஏப்ரல் 3 ஆம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த இயக்கத்தின் மூலம் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடங்குவதற்கு முன்பே இப்பணியை நிறைவேற்ற வேண்டும் எனவும் இதற்காக துண்டறிக்கைகள், திண்ணை பிரச்சாரங்கள், முக்கிய இடங்களில் முகாம்கள், வீடு தோறும் தேடிச் சென்று புதிய உறுப்பினர்களை கழகத்தில் இணைக்க வேண்டும். இந்த ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி வரை ஓராண்டு காலம் கலைஞரின் நூற்றாண்டு விழாவை தொண்டர்கள் இல்ல விழாவாக, மக்கள் விழாவாக கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM