வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் கடந்த பிப்ரவரி மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் மார்ச் 2ஆம் தேதி வெளியான நிலையில் தேசிய மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. இந்த கூட்டணியில் என்.பி.பி, யு.டி.எஃப், பி.டி.எஃப், ஹெச்.எஸ்.பி.டி.பி, பாஜக, சுயேட்சைகள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
முதல் பட்ஜெட் கூட்டம்
மேகாலயா முதல்வராக தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த கன்ராட் சங்மா பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் புதிய ஆட்சி அமைந்ததும் நடைபெற்ற முதல் பட்ஜெட் சட்டமன்ற கூட்டத் தொடரே களேபரமாக மாறியிருக்கிறது. ஏனெனில் மேகாலயா ஆளுநர் பகு சவுகான் இந்தியில் தனது உரையை ஆற்றினார். அப்போது எதிர்க்கட்சியான வி.பி.பியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்தி திணிப்பு
மேகாலயா ஒன்றும் இந்தி பேசும் மாநிலம் கிடையாது. முன்னதாக அசாம் மொழி எங்கள் மீது திணிக்கப்பட்டதை எதிர்த்து தான் தனி மாநிலம் பெற்றோம். மீண்டும் வேறு ஒரு மொழியை திணிக்க வேண்டாம். எங்களுக்கு புரியும் மொழியில் ஆளுநர் பேச வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த சூழலில் ஆளுநர் ஆங்கிலத்தில் படிப்பது கடினம். அதனால் தான் இந்தியில் பேசுவதாக சபாநாயகர் தாமஸ் ஏ.சங்மா, முதல்வர் கன்ராட் சங்மா ஆகியோர் தெரிவித்தனர்.
வி.பி.பி எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு
ஆனால் அதை ஏற்காமல் தொடர் கோஷங்கள் எழுப்பி வி.பி.பி கட்சி எம்.எல்.ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி சட்டமன்றத்தில் இவ்வாறு நடந்து கொள்வதை ஏற்க முடியாது என்று முதல்வர் கன்ராட் சங்மா கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து பேசிய சபாநாயகர் தாமஸ் ஏ.சங்மா, ஆளுநர் இந்தியில் பேச அனுமதிக்க வேண்டும்.
ஆங்கிலத்தில் உரை
அனைத்து உறுப்பினர்களுக்கும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட ஆளுநரின் உரை அளிக்கப்பட்டுள்ளது. எனவே தேவையற்ற சர்ச்சையை தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வெளிநடப்பு செய்த வி.பி.பி கட்சி எம்.எல்.ஏக்கள், இந்தி பேசாத மாநிலங்கள் எவை என்பதை மத்திய அரசு முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மாநில மொழியில் பேசும் மக்களிடம் இந்தியை கொண்டு வந்து திணிக்கக் கூடாது.
இந்தி வேண்டாம்
இந்தி பேசும் ஆளுநர்களை யார் கேட்டார்கள். அவர்களை வேண்டுமென்றே மத்திய அரசு அனுப்பி வைக்கிறது. இவர்கள் பேசும் மொழியை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக அவையில் இருந்து வெளியேறினோம். இந்தியில் ஆளுநர் பேசுவதை அவமானமாக உணராதவர்கள் அவையிலேயே அமர்ந்து பேச்சை கேட்கட்டும். மேகாலயா மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அரசுகள் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.