திருமலை : ஆந்திராவில் பள்ளி மாணவர்களுக்கு கேழ்வரகு இனிப்பு கஞ்சி வழங்கும் திட்டத்தை முதல்வர் நேற்று தொடங்கி வைத்தார். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் தாடேப் பள்ளியில் உள்ள முகாம் அலுவலகத்தில் இருந்தபடி காணொளி காட்சி மூலம் அரசு மற்றும் நிதி உதவி பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கேழ்வரகு மற்றும் வெல்லத்துடன் தயாரிக்கப்பட்ட ஊட்டச்சத்து பானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில் முதல்வர் ஜெகன் மோகன் பேசியதாவது: அரசு, நிதிஉதவி பள்ளிகளில் புதுமையான சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளப்பட்டு வருகிறது. அதில் ஒன்றாக வேறு எங்கும் இல்லாத வகையில் பள்ளி மாணவர்களுக்கு தினமும் ஒரு உணவு வழங்கும் விதமாக மெனு தயார் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. அதன் ஒருக்கட்டமாக இரும்பு சத்து, உடல் நலனை கருத்தில் கொண்டு கேழ்வரகு வெல்லம் சேர்த்து தயார் செய்யப்படும் ஊட்டச்சத்து கஞ்சி சத்ய சாய் அறக்கட்டளை மூலம் மற்றொரு புதுமையான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கான ஜகன்னா கோரமுத்தா திட்டத்தில் மற்றொரு ஊட்டச்சத்து சேர்க்கப்பட்டுள்ளது.
இதில் இன்று (நேற்று) முதல் பள்ளி மாணவர்களுக்கு காலையில் ராகி மால்ட் வழங்கப்பட உள்ளது. இந்த மால்ட் வாரத்தில் 3 நாட்கள் ராகி மால்ட் வழங்கப்பட உள்ளது. இத்திட்டம் மாநிலம் முழுவதும் உள்ள 44,392 அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 37,63,698 மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்காக அரசு ஆண்டுதோறும் ₹86 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி பாடசாலை மாணவர்களின் அறிவுசார் வளர்ச்சிக்கு உகந்த சூழலை கொண்டு வருவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இடைநிற்றல் எண்ணிக்கையை குறைப்பதிலும் கவனம் செலுத்தி அரசுப் பள்ளிகள் டிஜிட்டல் மயமாக்கப்படுகின்றன. 6ம் வகுப்பு முதல் ஒவ்வொரு வகுப்பிலும் டிஜிட்டல் கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 8ம் வகுப்பு மாணவர்களுக்கு டேப் வழங்கப்படுகிறது என முதல்வர் ஜெகன் மோகன் தெரிவித்தார். மாநிலம் முழுவதும் உள்ள அந்தந்த பகுதியில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், கலெக்டர்கள் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தனர்.