அதிமுகவில் உட்கட்சி பூசல் நீதிமன்றம் வரை சென்று அனல் பறந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் பாஜக உடனான கூட்டணியில் மோதல் போக்கு சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. அண்ணாமலை மற்றும் அதிமுக மூத்த தலைவர்களுக்கு இடையில் வார்த்தை போர் தொடர் கதையாகி வந்தது. ஒருகட்டத்தில் அதிமுக உடனான கூட்டணி விஷயத்தை கையிலெடுத்தால் தனது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று அண்ணாமலை தெரிவித்தார்.
அதிமுக – பாஜக கூட்டணி
இது தமிழக பாஜகவிற்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியது. சீனியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் டெல்லி பாஜக தலைமையும் எச்சரித்தது. அதன்பிறகு மோதல் போக்கு சற்றே குறைந்தது. ஆனால் அதிமுக தரப்பில் இருந்து அனல் கக்கும் வார்த்தைகள் வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன்,
எந்த மாற்றமும் இல்லை
தமிழகத்தில் அதிமுக மிகப்பெரிய கட்சிகளில் ஒன்று. நாங்கள் இதுவரை அதிமுக உடனான கூட்டணியில் தான் இருக்கிறோம். அகில இந்திய அளவில் பாஜக மிகப்பெரிய கட்சி. சர்வதேச அளவில் அதிகப்படியான எம்.எல்.ஏக்கள். எம்.பிக்களை கொண்டு விளங்குகிறது. அதிமுக – பாஜக கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை. கட்சியின் கீழ் மட்டத்தில் ஒன்று, இரண்டு பேர் அங்கொன்று இங்கொன்றுமாக சில பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றனர்.
Nellai Nainar Nagendran Function
பிரச்சினைகள் நீடிக்கும்
அது இருக்கத்தான் செய்யும். ஆனால் அதிமுக – பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே கொள்கை அடிப்படையில் கைகோர்த்து செயல்பட்டு வருகின்றன. எனவே மக்களவை தேர்தல் அறிவிக்கும் வரை பிரச்சினைகள் இருக்கலாம். தேர்தலை ஒட்டி வேட்பாளர்கள் அறிவித்த பின்னர், அனைவரும் ஒன்றுபட்டு வேலை பார்ப்பதில் கவனம் செலுத்துவர் என்று தெரிவித்தார்.
நெல்லையில் சமுதாய நலக்கூடம்
முன்னதாக நெல்லை தச்சநல்லூர் அடுத்த அனந்தபுரம் பகுதியில் புதிதாக சமுதாய நலக்கூடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன் பணிகளுக்காக திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 30 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது.
பூமி பூஜை விழா
முதலில் சிறப்பு பூஜைகளும், பின்னர் பொதுமக்களுடன் ஒன்றிணைந்து பூமி பூஜையும் செய்யப்பட்டன. பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், தமிழக வேளாண் பட்ஜெட்டில் குறிப்பிட்ட சில நபர்களுக்கும், சில மாவட்டங்களுக்கும் மட்டுமே திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. போதிய மழை இல்லாததால் நெல்லை மாவட்டம் வறட்சியாக உள்ளது.
Nainar Nagendran BJP
பட்ஜெட் கூட்டத்தொடர்
இதனை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். நெல்லை மாவட்டத்தில் செயல்பட்டு வந்த நெல் ஆராய்ச்சி நிலையத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தடுப்பணைகள் இதுவரை செயல்படுத்தப் படவில்லை. இத்தகைய பிரச்சனைகள் குறித்து சட்டமன்ற கூட்டத் தொடரில் கேள்வி எழுப்பவுள்ளோம் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.