நாடு முழுவதும்
கொரோனா வைரஸ்
பரவல் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் பலர் பாதிக்கப்பட்டனர். அதுவும் கொரோனா இரண்டாவது அலையில் பல லட்சம் உயிரிழப்புகள் ஏற்பட்டு பலரது வாழ்வை புரட்டி போட்டது. இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் இரண்டு ஆண்டுகள் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
கொரோனா கட்டுப்பாடுகள்
பகுதி நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு, கடைகளுக்கு கட்டுப்பாடு என கெடுபிடிகள் நீடித்தன. கொரோனா வைரஸ் பரவலில் இருந்து வெளியே வர சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் ஆனது. அதன்பிறகு பாதிப்புகள் பெரிதாக இல்லை. இருப்பினும் கொரோனா தொற்று முழுவதும் நீங்கவில்லை. மிகவும் குறைந்த அளவிலேயே பாதிப்புகள் இருந்து வந்தன.
மீண்டும் பரவல் அதிகரிப்பு
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக நோய்த்தொற்றின் தீவிரம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் புதிதாக 1,134 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது கடந்த சில நாட்களில் இல்லாத அளவிற்கு சற்றே அதிகரித்து காணப்படுகிறது. இதன்மூலம் மொத்த பாதிப்புகள் 7,026 ஆக அதிகரித்துள்ளது.
6 மாநிலங்களில் கவனம்
புதிதாக 5 பேர் உயிரிழந்ததன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 5,30,813ஆக உயர்ந்துள்ளது. இந்த புதிய உயிரிழப்புகள் சட்டீஸ்கர், டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் பதிவாகியுள்ளது. தற்போது கொரோனா பரவலின் பாசிடிவ் விகிதம் 1.09 சதவீதமாக இருக்கிறது. வாராந்திர பாசிடிவ் விகிதம் 0.98 சதவீதமாக உள்ளது.
சுகாதாரத்துறை கடிதம்
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கும் மகாராஷ்டிரா, குஜராத், தெலங்கானா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களுக்கு கடந்த வாரம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியிருந்தது. அதில், உள்ளூரில் பரவல் அதிகரித்திருப்பதை பார்க்க முடிகிறது. எனவே பாதிப்பின் தீவிரத்தை சரியான முறையில் மதிப்பீடு செய்வதன் அடிப்படையிலான அணுகுமுறையை கையாள அறிவுறுத்தப்பட்டது.
பிரதமர் மோடி ஆலோசனை
மேலும் நிலைமையை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றும், நோய்த்தொற்று அதிகரிப்பதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முடுக்கி விடலாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் கொரோனா பரவல் நிலவரம், சுகாதார வசதிகளில் முன்னேற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
மீண்டும் கட்டுப்பாடுகள்
இதன் முடிவில் சில அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. அதற்குள் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமா? எனப் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் தற்போதைய சூழலில் அதற்கான வாய்ப்பில்லை என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.