அதிர்ச்சி தகவல்! உயர் கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டுகளில் 61 தற்கொலைகள்!

அண்மையில் மும்பை ஐ.ஐ.டி உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில் நிகழும் தற்கொலைகளை தடுக்க என்ன நடவடிக்கைகள், மத்திய கல்வி நிறுவன வாரியாக எஸ்.சி, எஸ்.டி செல்கள் அமைக்கப்பட்ட விவரங்கள், ஐ.ஐ.டி மும்பை மாணவர் நல மையத்தின் தலைமை ஆலோசகரே இட ஒதுக்கீடுக்கு எதிராக பகிரங்கமாக பேசினாரா, இப்படிப்பட்டவர்கள் இது போன்ற குழுக்களில் இருந்தால் எப்படி பட்டியல் சாதி, பழங்குடி மாணவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும், பொருத்தமான நபர்களை இது போன்ற குழுக்களில் போட என்ன ஏற்பாடுகள், இது போன்ற குழுக்களில் பட்டியல் சாதி பழங்குடி பிரதிநிதித்துவம் இருப்பதற்கு என்ன வழி காட்டல்கள் ஏதேனும் உண்டா என்று 
சு. வெங்கடேசன் எம் பி கேட்டிருந்தார்.

அதற்கு கல்வி இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் அளித்துள்ள பதிலில் 108 மத்திய கல்வி நிறுவனங்களில் 87 இல் எஸ்.சி, எஸ்.டி செல்கள் உள்ளன. ஐ.ஐ.டி 19 (23), ஐ.ஐ.ஐ.டி 14 (25), ஐ.ஐ.எஸ்.இ.ஆர் 7 (7), ஐ.ஐ.எம் 20 (20), என்.ஐ.டி 26 (32), ஐ.ஐ.எஸ்.சி 1 (1) என்ற அளவில் இந்த செல்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். மற்ற நிறுவனங்களில் சம வாய்ப்பு செல், மாணவர் குறை தீர் செல், மாணவர் குறை தீர் குழு, மாணவர் சமூக மன்றம், குறை தீர் அலுவலர் ஆகிய ஏற்பாடுகள் உள்ளன, கடந்த ஐந்தாண்டுகளில் ஐ.ஐ.டி 33, என்.ஐ.டி 24, ஐ.ஐ.எம் 4 என மொத்தம் 61 மாணவர் தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன என்று தெரிவித்துள்ளார்

2009 இல் ராகிங்குக்கு எதிராக, 2019 இல் மாணவர் குறை தீர்ப்பு குறித்து, 2023 இல் தேசிய தற்கொலை தடுப்பு வழி முறைகள் குறித்து பல்கலைக் கழக மானியக் குழு விடுத்த சுற்றறிக்கைகளை சுட்டிக் காட்டியுள்ளார். தேசிய கல்விக் கொள்கை 2020 எப்படி மாணவர் ஆலோசனை, உணர்வு சமனிலை, விளையாட்டு, கலாச்சாரம், சமூக சேவை, சூழலியல் ஆகியன மூலம் மாணவர்களின் உள வலிமையை மேம்படுத்த வழி சொல்லியுள்ளது என்றும் விவரித்துள்ளார். 

ஐ.ஐ.டி மும்பையில் இறந்த மாணவர் குடும்பத்திற்கு உரிய ஆதரவை அந்நிறுவனம் தந்து வருவதாகவும், உள் விசாரணை நடைபெற்று வருவதோடு, மகாராஷ்டிரா அரசு அமைத்துள்ள சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு ஒத்துழைப்பு நல்கி வருவதாகவும், இட ஒதுக்கீட்டுக்கு எதிராக கருத்துகளை வெளியிட்ட மாணவர் நல மைய தலைமை ஆலோசகர் நீக்கப்பட்டு பட்டியல் சாதி, பழங்குடி பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

இது குறித்து சு. வெங்கடேசன் எம்பி கூறியுள்ளதாவது, “அமைச்சரின் பதில் அதிர்ச்சியை தருகிறது. 61 தற்கொலைகள் என்பது “மன அழுத்த சூழல்” மத்திய கல்வி நிறுவனங்களில் தொடர்வதையே காண்பிக்கிறது. இன்னும் 21 நிறுவனங்களில் எஸ்.சி, எஸ்.டி செல்கள் இல்லை என்பது இவ்வளவு தற்கொலைகளில் இருந்து இந்த உயர் கல்வி நிறுவனங்கள் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதும், அரசு தரப்பில் இருந்தும் கண்காணித்து உறுதி செய்யவில்லை என்பது தெளிவாகிறது. அதற்கு பதிலாக வேறு பெயர்களில் உள்ள பொதுவான குழுக்களை, புகார் முறைமைகளை கணக்கில் காண்பிக்க அமைச்சர் முயற்சிப்பது வேதனையானது. தற்கொலைகள் நிகழ்வதற்காக காத்திருப்பது போன்று அந்த நிறுவனங்களும் அரசும் இருப்பது கண்டிக்கத்தக்கது. எஸ்.சி, எஸ்.டி செல் என்ற பெயரிலேயே அந்த செல்கள் இயங்க வேண்டும், அப்போதுதான் நம்பிக்கை பிறக்கும் என்ற சாதாரண புரிதல் கூட இல்லையா? இல்லை சனாதன அணுகுமுறையின் பிரதிபலிப்பா என்ற கேள்விகள் தான் எழுகின்றன. 

எனது கேள்வியில் மிகத் தெளிவாக நிறுவன வாரியாக விவரங்கள் கேட்டு இருந்தும் நிறுவனங்களின் பெயர்களை சொல்லாமல் எண்ணிக்கையை மட்டும் அமைச்சர் குறிப்பிட்டு இருப்பது அரை குறையான பதிலா? பதிலின் மெய்த் தன்மை சோதிக்கப்படும் என்பதால் போடப்பட்ட திரையா? இது குறித்து ஏற்கெனவே நியமிக்கப்பட்ட நிபுணர் குழுக்களின் பரிந்துரைகள், சுற்றறிக்கைகள், வழி காட்டல் நெறிகள் எல்லாம் காகித அளவிலேயே உள்ளன என்பதன் வெளிப்பாடே இத்தனை உயிர்ப் பலிகள் ஆகும். எஸ்.சி, எஸ்.டி செல்கள் இருப்பதாக கூறப்படும் 87 மத்திய கல்வி நிலையங்களிலும் அவை செயல்படுகின்றனவா? மாணவர்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளனவா? செயல்பாட்டிற்கான வழி காட்டல்கள் வழங்கப்பட்டுள்ளனவா? என்பதெல்லாம் தனிக் கேள்விகள். 

ஐ.ஐ.டி மும்பை குறித்த பதில்கள் இவர்கள் சொல்கிற குழுக்களில் சாதிய உணர்வு கொண்டவர்கள் அமர்ந்து விடுகிறார்கள், எஸ்.சி எஸ்.டி பிரதிநிதித்துவம் இல்லாத நிலை இருக்கின்றன என்ற நிலைமையின் நிரூபணமே. பெரும் பொது வெளி எதிர்ப்பு எழுந்த பிறகே அந்த இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர் நீக்கப்பட்டார் என்பதும், எஸ்.சி, எஸ்.டி பிரதிநிதித்துவம் அவசர அவசரமாக நிரப்பப்பட்டதும் “பாதிப்பு கட்டுப்பாட்டு” நடவடிக்கையே என்பதும், தர்ஷன் சோலங்கி தற்கொலை மீதான  உள் விசாரணை துவங்குவதற்கு முன்பே எங்கள் வளாகத்தில் சாதிய பாரபட்சம் இல்லை என்று அதன் இயக்குனர் “தீர்ப்பு” எழுதியதும் மக்கள் கவனத்திற்கு வந்த அவலங்களே.

இதையெல்லாம் 9 ஆண்டுகளில் கண்காணிக்கவும், உறுதி செய்யவும் தவறியுள்ள ஒன்றிய கல்வி அமைச்சகம் புது மருந்தைக் கண்டு பிடித்தது போல “புதிய கல்விக் கொள்கை 2020” தற்கொலைகளை தடுத்து விடும் என்று நீட்டி முழக்கி வகுப்பு எடுத்திருப்பது ரசிக்க இயலாத நகைச்சுவையாகும். ஏக்கத்தொடும், பெற்றோரின் எதிர்பார்ப்புகளை சுமந்தும், சமூகத் தடைகளை தாண்டியும் உயர் கல்வி நிறுவனங்களில் அடியெடுத்து வைக்கும் ரோகித் வெமுலாக்களும், தர்ஷன் சோலங்கிகளும் வாழ்வதற்கு வழி சொல்லுங்கள் அமைச்சரே!”

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.