புதுடெல்லி: டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகம் முன் பாதுகாப்புக்கு போடப்பட்டிருந்த பேரிகார்டுகள் அகற்றப்பட்டுள்ளன. பதிலுக்குப் பதில் என்ற இந்தியாவின் எதிர் நடவடிக்கையா இது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியாவின் பஞ்சாபில் உள்ள அம்ரித் பால் என்ற பிரிவினைவாத நபரை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள சீக்கியர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்திய சீக்கியர்கள், அங்கிருந்த இந்திய தேசியக் கொடியையும் கீழே இறக்கினர்.
இதையடுத்து, இந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், இந்தியாவிலுள்ள இங்கிலாந்து தூதரக உயரதிகாரியை அழைத்து கண்டனத்தை பதிவு செய்தது. இந்நிலையில், மேலும், ஒரு பதில் நடவடிக்கையாக, டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தின் முன் பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த பேரிகார்டுகள் அகற்றப்பட்டுள்ளன. அதோடு, இங்கிலாந்து தூதர் அலெக்ஸ் எல்லிஸ்-ன் வீட்டின் முன் பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த பேரிகார்டுகளும் அகற்றப்பட்டுள்ளன.
இங்கிலாந்தின் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு உரிய பாதுகாப்பு கொடுக்க தவறியதற்கான பதில் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், இது குறித்து ‘தி இந்து’ நாளிதழ் சார்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள அலெக்ஸ் எல்லிஸ், பாதுகாப்பு விவகாரங்களில் நாங்கள் கருத்து சொல்ல மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கைகளுக்கும் வெளியுறவுத்துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.