நடனமாடி, பாட்டுப்பாடி பாடமெடுக்கும் அங்கன்வாடி ஆசிரியை! குவிந்து வரும் பாராட்டுக்கள்!

சிவகாசி அருகே நடனமாடியும், மெட்டு பாடல்களை தயார் செய்து பாடியும் பாடமெடுக்கும் அங்கன்வாடி ஆசிரியை ஒருவர், அனைவரது பாராட்டையும் பெற்றுவருகிறார்.
சிவகாசி அருகே சங்கரலிங்கபுரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர், மதுரை செல்லூரை சேர்ந்த ஜெய்லானி. இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அங்கன்வாடி ஆசிரியையாக பணியில் சேர்ந்துள்ளார். தனியார் கே.ஜி பள்ளிகளில் கொடுக்கும் கல்வியை போன்று அரசு அங்கன்வாடியிலும் வழங்கி, ‘அங்கன்வாடிகள் தனியாரைவிட மேம்பட்டவை’ என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் செயல்படும் இவர், பல புதுமையான முயற்சிகளை அங்கன்வாடியில் மேற்கொண்டு வருகின்றார்.
image
சிறார்களுக்கு தனது கலை திறமையை கொண்டு கல்வி கற்று கொடுத்து வரும் ஆசிரியை ஜெய்லானி, நடனமாடியபடியும், பாடங்களுக்கு ஏற்ப பாடல் மெட்டுக்களை அமைத்தும் கல்வி கற்றுக்கொடுக்கிறார். மேலும், முக்கிய தினங்களில் அன்றைய தினத்தின் சிறப்புகளை மாணவச் செல்வங்களுக்கு தனக்கே உரிய பாணியில் கலையோடு எடுத்து சொல்வதுமாக இருக்கிறார் ஆசிரியை ஜெய்லானி. இதன்மூலம் குழந்தைகளுக்கு கல்வி மீதான ஆர்வத்தை அடிப்படை வகுப்பு மூலம் அதிகப்படுத்தி வருகிறார் அவர்.
image
அதுமட்டுமல்லாமல் அதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று குழந்தைகளுக்கு நகம் வெட்டி விடுவது, கைகளை சுத்தமாக வைத்து கொள்ள அறிவுறுத்தி கைகளை கழுவி விடுவது என குழந்தைகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களையும் கற்று கொடுத்து வருகிறார். சிறார்களுக்கு கல்வி மீது மட்டுமல்லாமல் விளையாட்டு மீதான ஆர்வமும் ஏற்பட தினசரி அவர்களுக்குள் பல்வேறு விளையாட்டு போட்டிகளையும் நடத்தி அசத்தி வருகிறார் ஜெய்லானி. அவர் எடுக்கும் முயற்சியின் பலனாக குழந்தைகளும் கல்வியில் சிறந்து விளங்குகின்றனர். தமிழ் ஆங்கில பாடங்களை எந்தவித திணறல் இல்லாமல் சொல்லி அசத்துகிறார்கள் சிறார்கள்.
image
ஆசிரியை முயற்சியால் 10 குழந்தைகள் மட்டுமே வந்த அங்கன்வாடியில் தற்போது 25 குழந்தைகள் பயின்று வருகின்றனர். பெற்ற பிள்ளைகளை போல் நினைத்து அற்பணிப்போடு சிறார்களுக்கு தனது கலை திறன் மூலம் பாடங்கள் கற்று கொடுப்பது, நல்லொழுக்கம், ஆடல் பாடல், விளையாட்டு என பன்முக தன்மையுடன் கூடிய அங்கன்வாடியை உருவாக்கியுள்ள இந்த ஆசிரியையின் முயற்சியை அக்கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.