விஜய் டிவியில் பிரபலமாக இருக்கும் மணி மேகலை குக் வித் கோமாளி உள்ளிட்ட பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு மக்களின் மனதில் இடம் பிடித்தார். இவரின் சுட்டித் தனமும், குழந்தை சிரிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட, இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அதுமட்டுமல்லாமல் தனக்கென ஒரு யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். அதில் மணிமேகலை தன்னுடைய கணவர் ஹூசேன் உடன் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.
— பாஜக தகவல் தொழில் நுட்ப பிரிவு- செங்கம் (@karthinpm) March 21, 2023
இவர்கள் இருவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. மகிழ்ச்சியாகவும் சமூகத்தில் பிறருக்கு எடுத்துக்காட்டாகவும் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதங்களில் இயங்கும் சிலர் மணிமேகலையை அவருடைய கணவர் மதம் மாற்றிவிட்டதாக போலி செய்திகளை பரப்பி வருகின்றனர். குறிப்பாக வலதுசாரிகள் மற்றும் பாஜகவினர் மணிமேகலை, ஹூசைனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து லவ் ஜிகாத் செய்துவிட்டதாக ஆதாரமற்ற தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்பிக் கொண்டிருகின்றனர்.
— A Senthil Kumar (@ASenthi12447593) March 22, 2023
அவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதையும், மதம் சார்ந்த தங்களுடைய விருப்பங்கள் குறித்தும் பல பொதுமேடைகளில் வெளிப்படையாக கூட பேசியிருக்கின்றனர். இது அவர்களின் தனிப்பட்ட விஷயமும் கூட, யாருக்கும் பொதுவெளியில் சொல்ல வேண்டுமென்ற அவசியம் கூட அவர்களுக்கு இல்லை. இருப்பினும் தாங்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறோம் என்ற அடிப்படையில் நிகழ்ச்சிகளில் கூறியிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது மணிமேகலையை ஹூசைன் லவ் ஜிகாத் செய்துவிட்டதாக வேண்டுமென்றே, அடிப்படை ஆதாரமற்ற பொய்செய்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியான செய்தி ஒன்றை பார்த்து கடுப்பாகி இருக்கும் மணிமேகலை, ’ லைஃப் புல்லா உளறிகிட்டே இருக்கிறதுக்கு பதிலாக போய் உருப்புடற வழிய பாருங்க’ என காட்டமாக டிவிட்டரில் பதிலடி கொடுத்திருக்கிறார்.
— MANIMEGALAI (@iamManimegalai) March 22, 2023
இதில் வேடிக்கை என்னவென்றால் மணிமேகலை பதில் கொடுத்த பிறகும்கூட தவறான செய்தியை பதிவிட்ட அந்த நபர் தன்னுடைய பதிவுக்கு வருத்தம் தெரிவித்து நீக்கவில்லை. இன்னும் சிலருக்கு மணிமேகலை கொடுத்திருக்கும் இந்த விளக்கம் தெரியுமா? என்றும் தெரியவில்லை. சமூகத்தில் இப்படியாக பரப்பப்படும் போலி மற்றும் ஆதாரமற்ற பொய் செய்திகள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் காவல்துறையும் இப்படி பதிவிடுபவர்கள் மீது உரிய நவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் வலியுறுத்தியுள்ளனர்.