காஞ்சி பட்டாசு ஆலை விபத்து: அதிகபட்ச நிவாரணம் வழங்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: “தமிழக அரசு, இனியும் காலம் கடத்தாமல் பட்டாசுத் தொழில் சம்பந்தமாக, அனுமதி வழங்குவது சம்பந்தமாக, கண்காணிப்பு, தொடர் நடவடிக்கை குறித்து துரிதமான, தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு பட்டாசுத் தொழிலையும், பட்டாசுத் தொழிலில் ஈடுபடுவோர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலனையும் பாதுகாக்க வேண்டும்” என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை அருகே வளத்தோட்டம் பகுதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய பலர் தீக்காயமடைந்தனர். இந்நிலையில் தீக்காயமடைந்தவர்கள் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழக அரசு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள படுகாயமடைந்தவர்களுக்கு உயர்தர தீவிர சிகிச்சை அளிக்கவும், அவர்கள் விரைவில் குணமடயைவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழக அரசு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அதிகபட்ச நிவாரணத் தொகை வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கவும் முன்வர வேண்டும்.தமிழக அரசு, வெடி விபத்துக்கான காரணத்தை கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் ஆங்காங்கே உள்ள பட்டாசு ஆலைகளில், பட்டாசு குடோன்களில், பட்டாசு கடைகளில் அவ்வப்போது வெடி விபத்து, தீ விபத்து ஏற்படுவதும் உயிரிழப்புகள் ஏற்படுவதும், தொழிலாளர்கள் காயமடைவதும் தொடர்ந்து நடைபெறுவது மிகவும் வேதனைக்குரியது. இது போன்ற விபத்துகள் நடைபெறாமல் இருந்தால் தான் பட்டாசுத் தொழிலாளர்களின் குடும்பங்கள் நிம்மதியாக வாழ முடியும்.

எனவே தமிழக அரசு, இனியும் காலம் கடத்தாமல் பட்டாசுத் தொழில் சம்பந்தமாக, அனுமதி வழங்குவது சம்பந்தமாக, கண்காணிப்பு, தொடர் நடவடிக்கை சம்பந்தமாக துரிதமான, தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு பட்டாசுத் தொழிலையும், பட்டாசுத் தொழிலில் ஈடுபடுவோர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலனையும் பாதுகாக்க வேண்டும் என்று தமாகா சார்பில் வலியுறுத்துகிறேன். பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமாகா சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.