சென்னை,
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று பிற்பகலில் தொடங்குகிறது. சென்னையில் நடைபெறும் இந்த ஆட்டம் மிகவும் முக்கியமானது. ஏனென்றால் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும். இதனால் இந்தியா, ஆஸ்திரேலிய வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சேப்பாக்கம் மைதானத்தில் 3½ ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டி நடைபெறுவதால் சென்னை ரசிகர்கள் ஆவலுடன் இந்தப் போட்டியை எதிர் நோக்கி இருந்தனர். இதனால் இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன.
இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியை பார்க்கும் ஆவலில் காலையில் இருந்தே ரசிகர்கள் சேப்பாக்கம் ஸ்டேடியம் முன்பு திரண்டனர். நேரம் செல்ல செல்ல அதிக அளவிலான ரசிகர்கள் சேப்பாக்கம் பகுதியில் குவிந்தனர். 11 மணி அளவில் ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அதாவது போட்டி தொடங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பே ரசிகர்கள் மைதானத்துக்குள் சென்றனர். சேப்பாக்கம் மைதானத்தை சுற்றிலும் உள்ள வாலாஜா ரோடு, பெல்ஸ் சாலை, விக்டோரியா சாலை பகுதிகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
கிரிக்கெட் போட்டியையொட்டி சேப்பாக்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போலீசார் தீவிர பரிசோதனை செய்த பிறகே ரசிகர்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்..
LIVE : 3 ஆண்டுக்கு பின் சேப்பாக்கத்தில் இந்திய போட்டி.. குவியும் ரசிகர்கள் | நேரலை காட்சிகள்#chepaukstadium | #indvsaus https://t.co/53rcpdEkp3
— Thanthi TV (@ThanthiTV) March 22, 2023