ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த பதவிகள் இன்னும் காலாவதியாகவில்லை என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், இன்று ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பில் அனல் பறக்கும் வாதம் முன்வைக்கப்பட்டன.
அதில், அதிமுக தரப்பில் (இபிஎஸ்), வலுவான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுவதை வீழ்த்தும் நோக்கில் தான் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆகையால் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கூடாது.
ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை குறை கூற முடியாது”கட்சியினரின் குரலாக பொதுச்செயலாளர் தேர்தல் நடப்பதால் அதை தடுக்க முடியாது.
திமுகவை எதிர்கொள்ள தெளிவான, வலுவான ஒற்றைத் தலைமை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அந்த பதவிகள் காலாவதியாகவில்லை.
தாங்கள் தான் உண்மையான கட்சி என்றால், தேர்தல் ஆணையத்தில், மக்கள் மன்றத்தில் தங்களின் பலத்தை நிரூபிக்க வேண்டும். ஓபிஎஸ் தனது சொந்த சகோதரரை எந்த நோட்டீசும் கொடுக்காமல் கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்.
பொதுக்குழு முடிவுகளே இறுதியானது. முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்களே கட்சியில் நீடிக்க முடியும். ஓபிஎஸ் தனக்கென தனி கட்சியை நடத்தி வருகிறார். அதில் எங்களை அவர் நீக்கி, புதிய நிர்வாகிகளை நியமித்திருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி தான் இடைக்கால பொதுச்செயலாளர் என உலகத்துக்கே தெரியும். பொதுக்குழு உறுப்பினர்களின் குரலை ஒடுக்கும் வகையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இரட்டைத் தலைமையால் அரசியல் ரீதியாக முடிவெடுப்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் ஒற்றை தலைமையில் செயல்படலாம் என முடிவெடுக்கப்பட்டது. திமுகவை எதிர்கொள்ள தெளிவான, வலுவான ஒற்றை தலைமை வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது” என்று வாதிடப்பட்டுள்ளது.