பிரதமர் மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சி; உலகம் முழுவதும் ஒலிபரப்ப பா.ஜ.க. திட்டம்

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக அக்டோபர் 3-ந்தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

இதன்படி, 2-வது முறையாக பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னரும் இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் சமூக மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார்.

பிரதமர் மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சி வருகிற ஏப்ரல் 30-ந்தேதி ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது. இதனை வெற்றியடைய செய்யும் நோக்கில், பா.ஜ.க. முழு அளவில் தயாராகி வருகிறது. நிகழ்ச்சியை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஒலிபரப்ப பா.ஜ.க. முழு அளவில் தயாராகி வருகிறது.

இதுபற்றி பா.ஜ.க. வட்டாரம் தெரிவித்து உள்ள தகவலில், இந்த நிகழ்ச்சியை உலகம் முழுவதும் ஒலிபரப்பு செய்வதற்கான நோக்கம் என்னவெனில், பிரதமர் மோடி உலகளாவிய ஒரு தலைவராக இருக்கிறார்.

பிரதமரின் பணியை அனைத்து நாடுகளும் பாராட்டுகின்றன. அவர் என்ன பேசுகிறார் என கேட்க மக்கள் விரும்புகின்றனர். எங்களது இலக்கு, பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சியை எவ்வளவு நாடுகளுக்கு முடியுமோ அவ்வளவு நாடுகளுக்கு நாங்கள் ஒலிபரப்புவதற்கான நடவடிக்கையை முழு அளவில் செயல்படுத்துவோம் என தெரிவிக்கின்றது.

இந்நிகழ்ச்சியின்போது கடந்த காலங்களில், பிரதமர் மோடியுடன், பொதுமக்கள் உரையாட கூடிய நிகழ்வுகளும் நடைபெற்றது உண்டு. அதுபோன்ற நபர்களை தேர்ந்தெடுத்து, அவர்களை அந்தந்த மாநில முதல்-மந்திரிகள் மற்றும் கவர்னர்கள் கவுரவிப்பதற்கான திட்டமும் உள்ளது.

டெல்லியிலும் இதுபோன்று, புகழ் வெளிச்சத்திற்கு வராத குறிப்பிடத்தக்க பல நாயகர்களை வரவேற்கும் திட்டங்களும் உள்ளன. இவை எல்லாவற்றுடனும் கூட, பிரதமர் மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சியை நாம் கேட்க முடியும் என பா.ஜ.க. வட்டாரம் தெரிவித்து உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.