புதுடெல்லி: குஜராத் கலவரத்தின்போது தன்னை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளிகள் 11 பேரின் விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு தாக்கல் செய்த மனுவினை விசாரிக்க சிறப்பு அமர்வினை அமைக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி. பத்ரிவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு இதனை பில்கிஸ் பானுவின் வழக்கறிஞர் ஷோபா குப்தாவிடம் புதன்கிழமை தெரிவித்தது.
உச்ச நீதிமன்றத்தில் இது குறித்த விசாரணையின்போது, “இது அவசரமாக விசாரிக்கப்பட வேண்டிய வழக்கு. தனி பெஞ்ச் அமைக்கப்பட வேண்டும்” என்று வழக்கறிஞர் ஷோபா குப்தா தெரிவித்தார். அதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி, “நான் ஒரு பெஞ்சை அமைக்கிறேன். இன்று மாலை இதனைப் பார்க்கிறேன்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, குஜராத் கலவரத்தின்போது தன்னை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய 11 பேரின் விடுதலையை எதிர்த்து தாக்கல் செய்த மனுவின் விசாரணை கடந்த ஜன.24-ம் தேதி உச்ச நீதிமன்றம் நடைபெறவில்லை. ஏனெனில், சம்பந்தப்பட்ட நீதிபதிகள், கருணைக் கொலை தொடர்பான 5 பேர் அடங்கிய அமர்வில் அங்கம் வகித்து அந்த வழக்கினை விசாரித்துக் கொண்டிருந்தனர்.
இதற்கிடையில், குற்றவாளிகள் 11 பேரின் விடுதலையை எதிர்த்து தாக்கல் செய்திருந்த மனுவினைத் தவிர, பில்கிஸ் பானு, உச்ச நீதிமன்றம் கடந்த 2022 மே13-ம் தேதி பிறப்பித்த உத்தரவினை மறுசீராய்வு செய்யவும் தனியாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் 13-ம் தேதி உச்ச நீதிமன்றம், அதன் 1992-ம் ஆண்டு தண்டனைக் குறைப்பு உத்தரவின் படி, குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியுமா என ஆராய்ந்து இரண்டு மாதங்களுக்குள் முடிவு எடுக்கும்படி குஜராத் அரசை கேட்டுக்கொண்டது. இதன்படி, கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் குஜராத் அரசு 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மறு சீராய்வு செய்வேண்டும் என்று பில்கிஸ் பானு தாக்கல் செய்த மனுவினை உச்ச நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.