இஸ்லமபாத்,
பாகிஸ்தானில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதிகளை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் பாகிஸ்தானில் பல பகுதிகளில் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 6.8 ஆக ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பாகிஸ்தானின் லாகூர், இஸ்லமாபாத், ராவல் பிண்டி, குவெட்டா, பெஷாவர், கோஹட், லக்கி மார்வட் உள்ளிட்ட பகுதிகள் குலுங்கின.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியாவிலும் உணரப்பட்டது. டெல்லி, உத்தர பிரதெசத்தில் இரவு ஏற்பட்ட நில அதிர்வால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி இரவு நேரத்திலும் வெளியில் மக்கள் நின்று கொண்டிருந்தனர். பாகிஸ்தானில் நிலநடுக்கத்தால் உயிர்சேதமும் ஏற்பட்டுள்ளது. பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால் இரண்டு பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேபோல், 160 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.