போபால்,
மத்திய பிரதேசத்தின் மாண்ட்சார், நீமுச், ரத்லம் மாவட்டங்களில் ஓபியம் எனப்படும் கஞ்சா செடிகள் பயிரிடப்படுகின்றன. போதை பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தின் உரிமம் பெற்று, விளைவிக்கப்படும் இந்த நடைமுறை முழுவதும் வாரிய அதிகாரிகளால் கண்காணிக்கப்படுகிறது.
அபினி செடி என்றும் கசாகசா செடி என்றும் கூறப்படும், இதில் இருந்து உற்பத்தியாக கூடிய கசாகசா விதைகள் உணவின் ஒரு பகுதியாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த செடிகள் சிறிய அளவில் இருக்கும்போது, காய்கறி சந்தைகளிலும் விற்பனைக்கு வருகின்றன.
விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசும் இதனை கொள்முதல் செய்கின்றன. ஓபியமில் இருந்து மார்பீன் என்ற பொருள் பெறப்படுகிறது. ஓபியத்தில் இருந்து பல்வேறு பொருட்கள் பெறப்படுகின்றன.
அவற்றில் சில, இதயம் மற்றும் ரத்தம் சார்ந்த மருந்து பொருட்கள் உற்பத்திக்கும், மனநலம் மற்றும் தூக்க மருந்துகள் தயாரிப்புக்கும் பயன்படுகின்றன.
பொதுவாக ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்த ஓபியம் எனப்படும் அபினி செடிகள் பயிரிடப்படுகின்றன. இவற்றை கும்பல்கள் கடத்தவும் செய்கின்றன.
சட்டவிரோத அபினி செடிகளை போலீசார் பறிமுதல் செய்கின்றனர். அவற்றில் இருந்து தயாரிக்கப்படும் ஹெராயின் என்ற போதை பொருளையும் போலீசார் கைப்பற்றி வருகின்றனர்.
அப்படி பறிமுதல் செய்யும்போது பிடிபடும் நபர்களுக்கு 10 ஆண்டு கடுமையான தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.
ஆனால், ஆண்டுதோறும் ஓபியம் விதைகளை தேடி கிளிகள் படையெடுத்து வருகின்றன. அவை, இந்த ஓபியம் செடி முளைத்து, விதை பருவத்தில் இருக்கும்போது தூக்கி சென்று விடுகின்றன.
ஒவ்வோர் ஆண்டும் இதுபோன்று அதிக அளவில் ஓபியம் விதைகளை அவை தங்களது அலகில் வைத்து கொண்டு சென்று விடுகின்றன. இதனால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது.
டீ, காபி குடிப்பது போன்று இவற்றை சாப்பிடுவது அவற்றுக்கு சக்தியை தருகிறது என நிபுணர் ஒருவர் கூறுகிறார். நாளொன்றுக்கு 30 முதல் 40 முறை இந்த செடிகளை நோக்கி வந்து சாப்பிட்டு விட்டு போகின்றன. கசாகசா விதைகளையும் தூக்கி சென்று விடுகின்றன.
ஒரு முறை சாப்பிட்ட பின்னர் ஏற்படும் உணர்வால், அவற்றுக்கு கிளிகள் அடிமையாகி விடுகின்றன என ஓபியம் பற்றிய அந்த நிபுணர் கூறுகிறார். பட்டாசுகளை வெடித்தும், ஒலிபெருக்கி வைத்து சத்தம் எழுப்பியும் அவற்றை விவசாயிகளால் விரட்ட முடியவில்லை.
எனினும், அவற்றை கட்டுப்படுத்த பிளாஸ்டிக்கால் ஆன வலைகளை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். இதன் தொடர்ச்சியாக, இறக்கை கொண்டு பறக்கும் கொள்ளையர்களின் பாதிப்பில் இருந்து தங்களது பயிர்களை விவசாயிகள் பாதுகாத்து கொள்கின்றனர்.