சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார், சில தினங்களுக்கு முன் பாலியல் புகாரில் சிக்கி, கம்பி எண்ணுகிறார். பாலியல் புகாரில், இன்று (மார்ச் 22) தென்காசியில் மற்றொரு பாதிரியார் பாலியல் புகாரில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்தடுத்து பாதிரியார்கள் பாலியல் புகாரில் சிக்குவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே பாத்திமா நகரைச் சேர்ந்தவர் பாதிரியார் பெனடிக் ஆன்றோ, 29. பேச்சிப்பாறை மலங்கரை தேவாலயத்தில் பாதிரியாராக இருந்த போது, நர்சிங் மாணவி ஒருவரிடம் ஆபாசமாக நடந்ததாக எழுந்த புகாரில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மற்றொரு ‘ லவ் டுடே’ பாதிரியார்:
இந்நிலையில் தென்காசி மாவட்டம் வடக்கு சிவகாமிபுர தேவாலயத்தில் ஸ்டான்லி குமார் என்பவர் பாதிரியாராக பணியாற்றி வந்தார். இவரது சொந்த ஊர் நாகர்கோவில். இவர் தேவாலயத்திற்கு வரும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் வரும் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி, உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
ஆலங்குளம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், ஆலங்குளம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் தனது மகளிடம் பாதிரியார் ஸ்டான்லி குமார் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில்,’ தேவாலயத்திற்கு சென்ற எனது மகளிடம் வயிற்றில் கை வைத்து ஜெபிக்கிறேன் எனக் கூறி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும் தேவாலயத்திற்குள் கேமராக்கள் பொருத்தி, பிரார்த்தனை செய்ய வரும் பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என மிரட்டி வந்துள்ளார்’ எனக் குறிப்பிட்டுள்ளார். புகாரின் படி, ஆலங்குளம் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் போலீசார் இன்று பாதிரியார் ஸ்டான்லி குமார் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement