“தள்ளாடும் தமிழகம், ஆழ்ந்த உறக்கத்தில் ஆட்சியாளர்கள்!" – பட்ஜெட் குறித்து அண்ணாமலை காட்டம்

தமிழ்நாடு அரசின் 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். வேளாண் பட்ஜெட்டை, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்தார். இதற்கு ஆளும் கூட்டணி தரப்பிலிருந்து நேர்மறை கருத்துகள் வெளிவந்துகொண்டிருக்கும் அதேவேளையில், எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து எதிர்மறை கருத்துகளும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.

பட்ஜெட் 2023

அந்த வரிசையில், தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும், பட்ஜெட்டை விமர்சித்து, பல்வேறு கேள்விகளை எழுப்பி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “தமிழ்நாட்டின் நிதியமைச்சர், திக்கித் திணறி பட்ஜெட்டை வாசித்துக் கொண்டிருக்கும்போது, ஆளுங்கட்சியின் அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும், அவர்களின் ஆட்சியைப் போலவே செயலற்று ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். இதுபோன்ற பட்ஜெட் மாடல் இதுவரை எங்கும் நடந்ததில்லை. திக்கித் திணறி தடுமாறியது நிதியமைச்சர் மட்டுமல்ல, அரசின் நிதி நிலைமையும்தான்.

தமிழகத்தின் நிதி நிலைமை தள்ளாடிக் கொண்டிருக்கிறது. நிதிப் பற்றாக்குறையால் மட்டுமல்ல. தமிழக அரசின் திறமையின்மையாலும். வருமானத்தைப் பெருக்குவதற்கான வழிவகைகளை ஆராயாமல், ஆக்கபூர்வமான வருமானத்தை பெருக்கும் ஆற்றல் இல்லாமல், ஆண்டுக்கு ஆண்டு டாஸ்மாக் விற்பனை மூலம் திரட்டப்படும் நிதியை அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள். தமிழக மக்களை எல்லாம் மதுவுக்கு அடிமையாக்கி, இந்த மாநிலம் சாதிக்க நினைக்கும் மகத்துவம் என்ன… ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக மது விற்பனையை 45,000 கோடி ரூபாய்க்கும் மேல் உயர்த்தியிருப்பது தான் தி.மு.க அரசின் சாதனை. மது விற்பனையை மேலும் 50,000 கோடி ரூபாய்க்கு உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது. இது வளர்ச்சியா… வீழ்ச்சியா என்பதை நாம் மிக ஆழமாக சிந்திக்க வேண்டும்.

அண்ணாமலை

தமிழக மக்களையெல்லாம் குடிகாரர்களாக மாற்றும், உடல் நலத்தை கெடுக்கும், மது விற்பனையை அதிகரிப்பது என்பது ஒரு மாநில அரசு செய்யும் வேலையா… இங்கு மட்டும்தான் மிக விசித்திரமாக குடும்பத்தைக் கெடுக்கும் மது விற்பனையை அரசாங்கமும், அறிவுசார் கல்விக்கூடங்களை தனியார்களும் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நேரத்தில் உளவுத்துறை மக்களின் கோபத்தை எடுத்துச் சொன்ன பிறகு இந்த பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு வழங்க போவதாக அறிவித்திருக்கிறது.

ஆனால், அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை மறந்து, தற்போது தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. குடும்பத் தலைவிகளுக்கு என்ன தகுதி தேவைப்படுகிறது என்பது எனக்கு புரியவில்லை. ஆகவே தமிழகத்திலுள்ள இரண்டு கோடியே இருபது லட்சம் குடும்ப ரேஷன் அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். அதையும் கடந்த 28 மாதங்களுக்கான நிலுவைத்தொகையுடன் சேர்த்து, குடும்பத் தலைவிகளுக்கு 29,000 ரூபாயாக ஒரே தவணையில் வழங்க வேண்டும்.

பட்ஜெட்

தமிழகத்தின் நிதி நிலையை சீர் செய்வதற்காக, முன்னாள் ஆர்.பி.ஐ கவர்னர் ரகுராம் ராஜன், பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், பொருளாதார நிபுணர் சீன் டிரிஸ், பொருளாதார துறை முன்னாள் செயலர் நாராயணன், நோபல் பரிசு பெற்ற பெண்மணி எஸ்தர் டெஃப்லோ ஆகியோர் தமிழக அரசின் நிதி ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் ஆலோசனை தந்தார்களா… அந்த ஆலோசனைகள் அரசால் ஏற்றுக்கொள்ளப்படவில்லையா… தற்போது அவர்கள் ஆலோசகர்களாக தொடர்கின்றார்களா… அல்லது அவர்களின் ஆலோசனைப்படிதான் டாஸ்மாக் சாராய வியாபாரம் உயர்த்தப்படுகிறதா?

கடந்த 09.08.2021 அன்று நிதியமைச்சர் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். அதில் தமிழக அரசின் நிதி நிலைமையை விளக்கியிருந்தார். `தமிழகத்தின் 2020-21 நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக உள்ளது. 2021-22ம் ஆண்டின் இடைக்கால நிதிநிலை அறிக்கை கணக்கீட்டின்படி மாநிலத்தின் ஒட்டுமொத்த கடன் ரூ 5,70,189 கோடியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.2,63,976 கடன் இருக்கிறது” என்று தி.மு.க-வின் வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தின் ‘கடன் சுமையைக் குறைப்போம்’ என்று வாக்குறுதி தந்துவிட்டு, 2023-24 நிதியாண்டில் தமிழகத்தின் மொத்த கடன் சுமை 7,26,028 கோடி ரூபாய் என்ற அளவில் இருக்கும் என தி.மு.க அரசு தெரிவித்திருக்கிறது.

தமிழக பட்ஜெட் 2023-24

தமிழக அரசின் கடந்த கால கடன் வளர்ச்சி, 1999-2000-ல் ரூ.18,989 கோடி, 2000-2001-ல் ரூ.28,685 கோடி, 2001-2002-ல் ரூ.34,540 கோடி, 2005-2006-ல் ரூ.50,625 கோடி, 2011-2012-ல் ரூ.1,03,999 கோடி, 2015-2016-ல் ரூ.2,11,483 கோடி, 2017-2018-ல் ரூ.3,14,366 கோடி, 2020-2021-ல் ரூ.4,56,660 கோடி, 2023-2024-ல் ரூ.7,26,028 கோடி. இன்றைக்கு உள்ள சூழலில் தமிழகத்தில் 2.20 கோடி குடும்பங்கள் இருப்பதாக எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு குடும்பங்களின் தலையிலும் ரூ,3,30,000 ரூபாய்க்கும் மேல் கடன் இருக்கிறது.

பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பள்ளிகளும், பள்ளி கல்வித்துறையின்கீழ் கொண்டு வரப்படும், என்று இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறையின் பள்ளிகளை எல்லாம் அரசுப் பள்ளிகளாக மாற்றம் செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை. மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை கடந்த பட்ஜெட்டில் ரூ.5,000-லிருந்து ரூ.6,000-மாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிப்பு வழங்கப்பட்டது. இதை ரூ.8,000-மாக உயர்த்தித் தருவோம் என்று வழங்கிய தேர்தல் வாக்குறுதி தி.மு.க-வினருக்கு நினைவில்லாமல் போனது வருத்தமே. ஆண்டுக்கு 10 லட்சம் தனியார் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் மற்றும் 3 லட்சம் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என இனிப்பான தேர்தல் வாக்குறுதியை தி.மு.க அறிவித்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அந்த 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுவிட்டனவா, 7 லட்சம் அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுவிட்டனவா என்பதை தமிழக அரசு இந்த பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை. இனிமேலாவது செய்யப்போகிறோம் என்ற அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

டாஸ்மாக் நிறுவனம்

இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களில், தி.மு.க வாக்குறுதிகளில் ஒன்றான தமிழகத்தில் 21 கலை அறிவியல் கல்லூரிகள் கட்டப்படும் என்ற அறிவிப்பு என்ன ஆனது… உலகளாவிய அதிநவீன விளையாட்டு நகரத்தை அமைப்பதற்கு ஒரு ரூபாய்கூட நிதி ஒதுக்காத காரணம் என்ன… கல்விக்கடன் ரத்து என்ன ஆனது… நகைக்கடன் ரத்து என்ன ஆனது… ஏறத்தாழ 70 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோருக்கு நகைக்கடன் ரத்து மறுக்கப்பட்ட ரகசியம் என்ன… பெட்ரோல் டீசல் விலை குறைப்பு சொன்னபடி ஏன் நடைபெறவில்லை… 100 நாள் வேலை திட்டம் 150 நாள்களாக உயர்த்தப்பட்டதா… சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் என்ன ஆனது… பழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி நினைவிருக்கிறதா… பால் விலை உயர்வு… மின் கட்டண உயர்வு… சொத்து வரி உயர்வு… மத்திய அரசு விலை குறைத்தும் தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு என்று வரிகளையும் கட்டணங்களையும் உயர்த்திவிட்டு, மக்களை கசக்கிப் பிழிந்து வரிகளை எல்லாம் வசூலித்துவிட்டு, போதா குறைக்கு 45,000 கோடி ரூபாய்க்கு மதுபான போதையிலேயே தமிழகத்தை மூழ்கவிட்டு, `வருவாய் பற்றாக்குறையைக் குறைத்துவிட்டோம்’ என்று தமிழக அரசு எப்படிச் சொல்கிறது.

2022-23-ல் ரூ.2,84,188 கோடியாக மதிப்பிடப்பட்ட மொத்த வருவாய் செலவினங்கள், திருத்தப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் ரூ. 2,76,135 கோடி மட்டுமே. சதவிகிதக் கணக்கின் அடிப்படையில் வெறும் 3 சதவிகிதம்கூட குறையவில்லை. இளைஞர் நலன், வேலைவாய்ப்பு, வேளாண்மை, நீர் பாசனம், தொழில் முன்னேற்றம், தனிநபர் வருமானம், வளர்ச்சி மற்றும் கட்டமைப்புகள் ஆகியவற்றுக்கு எந்தவிதமான உறுதியான திட்டங்களும் தமிழக அரசால் அறிவிக்கப்படவில்லை. பட்ஜெட்டில் நமது கடன் நிலை என்ன… வருமானம் எப்படி எல்லாம் மாறியிருக்கிறது… செலவினம் எப்படி எல்லாம் மாறியிருக்கிறது ஆகிய மூன்றும் மிக முக்கியமானவை.

அண்ணாமலை

இது குறித்த விரிவான தகவல் பட்ஜெட்டில் இல்லை. பொதுத்துறை நிறுவனங்களான மின்வாரியம், போக்குவரத்துக் கழகம், குடிநீர் வடிகால் வாரியம், மெட்ரோ குடிநீர் வாரியம் போன்றவை எந்த நிலையில் இருக்கின்றன என்பதையும் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இப்படி எதுவுமே செய்யாமல் நாடகம் போட்டு வாய்ச்சொல் வீரம் காட்டுவதன் மூலம், தமிழகத்தின் தள்ளாட்டத்தை நிறுத்த முடியாது. இதற்கு மேல் திறனற்ற தி.மு.க-விடம் எதிர்பார்க்கவும் முடியாது” எனக் கூறியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.