திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் ராஜகோபுரம், திருமஞ்சன கோபுரம் மற்றும் அம்மணியம்மன் கோபுரம் உள்ளிட்ட மூன்று வாயில் வழியாக பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதனால், அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று பலத்த பாதுகாப்பையும் மீறி தெற்கு கோபுரமான திருமஞ்சன கோபுரம் வழியாக போதை ஆசாமி ஒருவர் கோவிலுக்குள் கத்தியுடன் நுழைந்து பின்னர் கத்தியை காட்டி பக்தர்களை மிரட்டியுள்ளார். இதைப்பார்த்து பயந்து போன பக்தர்கள் அங்கிருந்து அலறியடித்து அங்கும் இங்கும் ஓடி வந்தனர்.
மேலும், அந்த நபர் அங்குள்ள ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டு, அங்குள்ள கண்ணாடியையும் உடைத்துள்ளார். இதையடுத்து கோவில் ஊழியர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர்.
அதன் படி, போலீசார் அந்த போதை ஆசாமியை கைது செய்து, விசாரணை நடத்தியதில், அந்த நபர் பெங்களூருவைச் சேர்ந்த அப்பு என்பது தெரிய வந்துள்ளது. மேலும், அவரிடம் எதற்காக கோவிலுக்குள் நுழைந்தார் என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், கோவிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.