ரேஷன் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்ட விபரத்தை அனுப்புமாறு மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அனுப்பியுள்ள கடிதத்தில், சென்னை உயர்நீதிமன்ற ஆணையில் தகுதியுள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர்களுக்கு பதவி உயர்வு வழங்கி பின்னர் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் நிரப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி தங்கள் மண்டலத்தில் பணிபுரியும் தகுதியுள்ள விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்ட விவரத்தினை அனுப்பிடுமாறு கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் (salesman) மற்றும் கட்டுநர் (Packer) பதவிகளுக்கான அறிவிப்பை அந்தந்த மாவட்ட கூட்டுறவுத் துறை ஆட்சேர்ப்பு நிலையங்கள் கடந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியிட்டன.
இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பின் மூலம், மாநிலம் முழுவதும் 4000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டன. இதற்கான, நேர்காணல் தேர்வு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகத்தில் டிசம்பர் 15 முதல் 30-ம் தேதி வரை நடைபெற்றது.
நேர்காணல் தேர்வு நடைபெற்று முடிந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையில், இதற்கான தேர்வு முடிவுகள் இதுவரை அறிவிக்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில், நியாய விலைக் கடைகளில் ஏற்கனவே பணிபுரிந்து வரும் விற்பனையாளர்கள் (salesman) மற்றும் கட்டுநர் (Packer) பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
newstm.in