திருச்சூர் :இளம் வயதில் உயிர் இழந்த மகனின் நினைவுகளை உயிர்ப்புடன் வைத்திருக்கும் நோக்கில், அவரது விவரங்கள் அடங்கிய, க்யூ.ஆர்.கோடை கல்லறையில் பெற்றோர் பொறித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள, குரியாச்சிராவைச் சேர்ந்தவர் பிரான்சிஸ். இவரது மனைவி லீனா. மத்திய கிழக்கு நாடான, ஓமனில் வசித்து வரும் இந்த தம்பதிக்கு, ஐவின் பிரான்சிஸ் என்ற மகன் இருந்தார்.
மருத்துவம் படித்த இவர், இசை மற்றும் விளையாட்டுகளில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தார்.
கடந்த, 2021ல், பேட்மின்டன் விளையாடிய போது, எதிர்பாராதவிதமாக ஐவின் பிரான்சிஸ் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது, அவரது பெற்றோருக்கு மிகுந்த மனவலியை தந்தது.
உயிரிழந்த ஐவின் பிரான்சிஸ் உடல், குரியாச்சிராவில் உள்ள செயின்ட் ஜோசப் சர்ச் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், ஐவின் பிரான்சிஸ் குறித்த முழு விவரங்கள் அடங்கிய இணையதளத்தை உருவாக்கி, இதற்கான க்யூ.ஆர்., கோடையும் அவரது பெற்றோர் தயாரித்தனர். தற்போது இந்த இந்த க்யூ.ஆர்., கோடை அவரது கல்லறையில் பொறித்து உள்ளனர்.
இது குறித்து அவரது பெற்றோர் கூறியதாவது:க்யூ.ஆர்., கோடு வைக்கும் யோசனையை, ஐவின் சகோதரி ஈவ்லின் பிரான்சிஸ் கூறினார். எங்கள் மகன் வாழ்க்கை அனைவருக்கும் உந்துதலாக இருக்க வேண்டும் என விரும்பியதால், கல்லறையில், க்யூ.ஆர்., கோடு வைத்தோம்.
இதை ‘ஸ்கேன்’ செய்வதன் வாயிலாக ஐவின் பிரான்சிஸ் புகைப்படங்கள், அவரது கல்லுாரி நிகழ்ச்சிகள் மற்றும் அவரைப் பற்றிய பிற விவரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும், அவரது கீபோர்டு மற்றும் கிட்டார் நிகழ்ச்சிகளையும் வீடியோ வாக காணலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.ஒரு குறிப்பிட்ட நிறுவனம் பற்றி தெரிந்து கொள்ள, அந்நிறுவனத்தின் முழு விவரங்களை உள்ளடக்கிய, க்யூ.ஆர்., கோடு உருவாக்கப்படுகிறது.
இதை மொபைல் போனில் ஸ்கேன் செய்வதன் வாயிலாக உடனடியாக அந்நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று தகவல்களை பார்க்க முடியும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்