திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று யுகாதி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. யுகாதியையொட்டி ஷோபகிருத ஆண்டு பஞ்சாங்கத்தை அர்ச்சகர்கள் படித்து காண்பித்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் யுகாதி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று காலை தேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி, விஷ்வக்சேனாதிபதி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஆன்ந்த நிலையம் விமான பிரகாரம் மற்றும் கொடிமரத்தை சுற்றி ஊர்வலமாக கோயிலுக்குள் சென்றனர்.
கோயிலில் கருடாழ்வார் எதிரே சர்வபூபால வாகனத்தில் கொலு வைக்கப்பட்டது. அதன்பின் மூலவருக்கும் உற்சவவர்களுக்கு புது வஸ்திரம் அணிவிக்கப்பட்டு ஷோபகிருத ஆண்டு பஞ்சாங்கத்தை அர்ச்சகர்கள் படித்து காண்பித்தனர். யுகாதி தெலங்கு வருடப்பிறப்பையொட்டி தேவஸ்தான தோட்டக்கலைத் துறையினர் கோயிலுக்குள், வெளியே ஆப்பிள், திராட்சை, உருளைக்கிழங்கு, சப்போட்டா, ஆரஞ்சு, முலாம்பழம், மாம்பழம், கரும்பு போன்ற பல்வேறு வகையான பழங்களின் வைகுண்டமாக வடிவமைக்கப்பட்டது. இவை அங்கு வந்த பக்தர்கள் அனைவரையும் கவர்ந்தது. மேலும் கோயிலுக்குள் கொடிமரம், பலிபீடம் உள்ளிட்டவை 10 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
* ரூ.4,411 கோடிக்கு பட்ஜெட் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் வரவு செலவுடன் கூடிய வருடாந்திர பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் ரூ.4,411 கோடியே 68 லட்சம் செலவுடன் பட்ஜெட்டிற்கு அறங்காவலர் குழுவில் முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து ஆந்திர மாநில அரசுக்கு ஒப்புதல் அளிக்க பரிந்துரைக்கப்பட்டது. அதன்பேரில் இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டை ஆந்திர மாநில அரசு ஒப்புதல் அளித்தது. இதுகுறித்து திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது: திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு கொரோனா முன்பு உண்டியல் வருவாய் ஆண்டுக்கு ரூ.1200 கோடியாக இருந்தது. கொரோனாக்கு பிறகு உண்டியல் வருவாய் ரூ.1500 கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில், உளுந்தூர்பேட்டையில் நன்கொடையாளரின் நன்கொடையில் கட்டப்பட்டு வரும் வெங்கடேஸ்வரா சுவாமி கோயிலில் ரூ.4.70 கோடியில் சில மேம்பாட்டுப் பணிகள் தேவஸ்தானம் சார்பில் மேற்கொள்ளப்பட உள்ளது. பக்தர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கூடுதலாக 30 லட்டு கவுன்டர்கள் கட்ட ரூ.5.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.