புதுடில்லிதமிழகத்தைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் உட்பட 50 பேருக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று முதற்கட்டமாக பத்ம விருதுகளை வழங்கினார்.
கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி உட்பட பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுவோர் பட்டியல், குடியரசு தினத்தை ஒட்டி கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்டது.
இதன்படி, மூன்று பேருக்கு பத்ம விபூஷண், ஒன்பது பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன. மறைந்த பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம், பாம்பு பிடி வீரர்கள் கோபால், மாசி சடையன் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து பேரின் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றன.
இந்நிலையில், விருது அறிவிக்கப்பட்டவர்களில் 50 பேருக்கு, புதுடில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று முதற்கட்டமாக பத்ம விருதுகளை வழங்கினார். கர்நாடக
தொடர்ச்சி 4ம் பக்கம்
தமிழகத்தின்…
முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு,90, நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. புகழ்பெற்ற கட்டட கலை நிபுணரான மறைந்த பால்கிருஷ்ணா தோஷிக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷண் விருதை அவரது குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.
ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லாவுக்கு பத்ம பூஷண் விருதை ஜனாதிபதி வழங்கினார். புதுடில்லியைச் சேர்ந்த பேராசிரியர் கபில் கபூர், ஆன்மீகத் தலைவர் கம்லேஷ் பட்டேல், பிரபல பின்னணி பாடகி சுமன் கல்யாண்பூர் ஆகியோருக்கு பத்மபூஷண் விருதுகள் வழங்கப்பட்டன.
தமிழகத்தைச் சேர்ந்த இருளர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர்களான வடிவேலு, மாசி சடையன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருதை திரவுபதி முர்மு வழங்கினார். முன்னதாக பிரதமர் மோடியை வணங்கிய இருவரும், ஜனாதிபதியிடம் விருதை பெற்றுக் கொண்டனர். ஜோதையா பாய் பைகா, உஷா பார்லே, ராமன் செருவயல், பானுபாய் சுனிலால் சித்தாரா, சங்குராத்ரி சந்திரசேகர் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன. கடந்த ஆண்டு மறைந்த பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவுக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை அவரது மனைவி ரேகா பெற்றுக் கொண்டார்.
விழாவில், துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, லோக் சபா சபாநாயகர் ஓம் பிர்லா, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். பத்ம விருதுக்கு 106 பேர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ளவர்கள் மற்றொரு விழாவில் விருதுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்