இந்த மாதம் ஆரம்பத்திலிருந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, கடந்த சில தினங்களாக ஏறிக்கொண்டே வந்தது. இந்நிலையில், தங்கம் விலை சட்டென்று ரூ.800 குறைந்து மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மார்ச் 1-ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.5,235-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.41,880-க்கும் விற்பனை ஆகியது. அதன் பின்னர் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை மார்ச் 14-ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.5,390-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.43,120-க்கும் விற்பனை ஆகி தங்கத்தின் விலை ரூ.43,000-க்கு வந்தது.
அடுத்த மூன்று நாள்களிலேயே தங்கத்தின் விலை ரூ.44,000-த்தை தொட்டு ஒரு பவுன் தங்கம் ரூ.44,480-க்கு விற்பனை ஆனது. மூன்று நாள்களுக்குப் பின்னர், தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.5,470 ஆகவும், ஒரு பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.43,760 ஆகவும் விற்பனை ஆகி வருகிறது. ஒரே நாளில் தங்கத்தின் விலை ரூ.800 குறைந்துள்ளது வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுக்குறித்து கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தர் கூறுகையில், “அமெரிக்க பெடரல் வங்கி பணவீக்கத்தைக் குறைப்பதற்காக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் பார்வை தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. கடந்த வாரம் சர்வதேச சந்தையில் தங்கம் விலை 50 – 80 டாலர் அதிகரித்தது. அதிலிருந்து தற்போது 20 – 25 டாலர் குறையும்போது, அந்த விலை மாற்றம் நமது சந்தையிலும் பிரதிபலிக்கிறது. ஆனாலும், தங்கம் விலை தொடர்ந்து குறையும் என்று கூற முடியாது. தங்கம் விலை அதிகரிக்கத்தான் அதிக வாய்ப்புகள் உள்ளன. 2009-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வந்தது. அதே மாதிரியான போக்குதான் தற்போது காணப்படுகிறது” என்றார்.