புதுடெல்லி: டெல்லியில் உள்ள சிறைகளில் ஜாமீன் பத்திரம் வழங்க பணம் இல்லாமல் தவித்து வரும் கைதிகளுக்கு ரூ. 5.11 கோடி பணம் வழங்க தயாராக இருப்பதாக சிறைத்துறை இயக்குனருக்கு மோசடி மன்னன் சுகேஷ் சந்திர சேகர் கடிதம் எழுதியுள்ளார். இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்தது, 200 கோடி பணமோசடி செய்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வருகிறார் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர். இந்தநிலையில் சுகேஷ் சந்திரசேகர் சிறைத்துறை இயக்குனருக்கு நேற்று கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: ஜாமீன் பத்திரங்கள் தாக்கல் செய்ய பணம் இல்லாததால் பல கைதிகள் சிறையில் இருக்கின்றனர். கைதிகளுக்கோ அல்லது அவர்களது குடும்பத்தினருக்கோ அந்த தொகையை செலுத்த முடியவில்லை. இதனால் அவர்களுக்காக நான் கண்ணியமான முறையில் சம்பாத்தித்த பணத்தை வழங்க விருப்பப்படுகிறேன். அத்தகைய கைதிகளுக்கு குறைந்தபட்சம் என்னால் இந்த உதவியை செய்ய விரும்புகிறேன். வருகிற 25 ம் தேதி (நாளை மறுநாள்) எனது பிறந்தநாள் வருகிறது. அதனை முன்னிட்டு கைதிகளுக்கு ஜாமீன் பத்திரம் தாக்கல் செய்ய ரூ. 5.11 கோடி வழங்க தயாராக இருக்கிறேன். இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார்.