உலகத்தின் பல்வேறு நாடுகளில் உள்ள பெரும் கார்பரேட் நிறுவனங்களில் ஏற்கெனவே இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது புதிதாக இணைந்துள்ளார். லஷ்மன் நரசிம்மன். இவர் பிரபல காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நரசிம்மன், இந்தியாவின் புனேவில் வளர்ந்தவர். அங்கு உள்ள புனே பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பட்டம் பெற்று பின்னர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் உள்ள லாடர் இன்ஸ்டிடியூட்டில் ஜெர்மன் மற்றும் சர்வதேச ஆய்வுகளில் எம்.ஏ பட்டமும் , அதே பல்கலைக்கழகத்தில் நிதித்துறையில் எம்.பி.ஏ பட்டமும் பெற்றுள்ளார். இவர் ஆறு மொழிகளை பேசக்கூடியவர் மற்றும் ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூஷனின் அறங்காவலராகவும், வெரிசோனின் இயக்குநர்கள் குழுவின் உறுப்பினராகவும், இங்கிலாந்து பிரதமரின் பில்ட்பேக் பெட்டர் கவுன்சிலாகவும் பணியாற்றுகிறார்.
நரசிம்மன் இதற்கு முன்பு McKinsey & Company-யில் 19 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். அமெரிக்கா, இந்தியா மற்றும் ஆசியாவில் உள்ள நுகர்வோர் பொருள்கள், சில்லறை விற்பனை மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அதே போல உலகின் பல வணிகங்கள், உணவகங்கள், இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குவதில் 30 ஆண்டுகளாக அனுபவம் பெற்றவர். இவர் பெப்ஸிகோவில் பல்வேறு நிர்வாக பொறுப்புகளையும் வகித்துள்ளார்.
ஸ்டார்பக்ஸில் இணைவதற்கு முன்பு, நரசிம்மன் ரெக்கிட் (Reckitt) என்ற பன்னாட்டு நுகர்வோர் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக இருந்தார். அவர் ரெக்கிட்டின் இ-காமர்ஸ் வணிகத்தை வளர்க்கப் பெரிதும் உதவியுள்ளார். மேலும், கொரோனா தொற்றின்போது அந்நிறுவனத்தின் முன்னணி பணியாளர்களுக்குப் பெரிதும் உதவியுள்ளார். இந்த நிலையில்தான் லக்ஷ்மன் நரசிம்மன், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஸ்டார்பக்ஸின் சி.இ.ஓ-வாக அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த 20-ம் தேதி அந்நிறுவனத்தின் புதிய தலைவராகப் பதவியேற்றுள்ளார். நாளை நரசிம்மன் தலைமையில் ஸ்டார்பக்ஸின் பங்குதாரர்கள் ஆண்டுக் கூட்டம் நடைபெறவுள்ளது.