இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் நேற்று ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தால் 12 பேர் பலியானார்கள். மேலும் 160 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானில் நேற்று முன்தினம் இரவு பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக குடியிருப்புக்கள், வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, பெஷாவர் உள்பட பல்வேறு பகுதிகளில் பூகம்பம் உணரப்பட்டது. இதன் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சம்பவங்களில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இரண்டு பெண்கள், இரண்டு சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
இதேபோல் ஆப்கானிஸ்தானில் பெரும்பாலான பகுதிகளிலும் நிலநடுக்கத்தை பொதுமக்கள் உணர்ந்துள்ளனர். நிலநடுக்கத்தினால் இங்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியை மையமாக கொண்டு 180கி.மீ. ஆழத்தில் பூகம்பம் உருவாகி இருந்தது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.8 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. பாகிஸ்தான் மற்றும் இந்தியா மட்டுமின்றி கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், சீனாவிலும் நிலஅதிர்வு உணரப்பட்டது.