சட்டசபை கேள்வி நேரத்தின்போது எழுந்த விவாதம்:
வைத்தியநாதன், காங்.,: லாஸ்பேட்டை தொகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் டெண்டர் விடப்பட்டும் காலதாமதமாகிறது. அதற்கான கோப்புகள் சுற்றிக் கொண்டே இருக்கின்றது.
முதல்வர்: ஸ்மார்ட் சிட்டி பணிகள் விரைவாக நடக்கவில்லை. அதற்கான காரணம் எல்லோருக்கும் தெரியும். உண்மை சொல்லுவதென்றால் தலைமை செயலர் தலைமையிலான கமிட்டி தான் ஸ்மார்ட் சிட்டி பணிகளை மேற்கொண்டு வருகிறது. அவர்கள் தான் நிதி விஷயத்திலும் முடிவெடுக்க முடியும். நமக்கு அதில் பங்கு இல்லை. அரசுக்கு கோப்பு வருவதில்லை. அப்படி தான் நிலைமை உள்ளது.
நேரு,சுயே.,: ஸ்மார்ட் சிட்டி நம்மூரில் நடக்கின்றது. அதில் நடக்காத பணிகளை சொல்கிறோம். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த திட்டம் எதற்காக கொண்டு வரப்பட்டது.
கல்யாணசுந்தரம், பா.ஜ.,; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் காலாப்பட்டு தொகுதி எடுத்துக் கொள்ளப்படவே இல்லை. முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.
சிவசங்கர்,சுயே.,: எனது தொகுதியிலும் பல்வேறு பணிகள் அப்படியே உள்ளது. சாலைகள் மோசமாக உள்ளது.
ரமேஷ்,என்.ஆர்.காங்.,; ஸ்மார்ட் சிட்டி திட்டத்தினை வேகப்படுத்த முதல்வர் மாதம் ஒரு முறை ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும்
நேரு, சுயே.,: ஸ்மார்ட் சிட்டி பணிகளில் தாமதம் ஏற்படுகிறது. டெண்டர் விடப்பட்ட பணிகள் கூட அப்படியே கிடக்கின்றன. இதனை யார் தான் கேட்பது. ஸ்மார்ட் சிட்டி காலக்கெடு ஜூலை மாதம் முடிகிறது. நாம் என்ன செய்ய போகிறோம். ஸ்மார்ட் சிட்டி பணிகளை மக்கள் பிரதிநிதிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
முதல்வர்: கடந்த ஆட்சியில் ஏதும் செய்யவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஸ்மார்ட் சிட்டி பணிகள் எப்படி இருந்தன என்று எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். துவக்கத்தில் ரூ. 60 கோடிக்கான பணிகள் மட்டுமே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்தன. தற்போது ரூ.250 கோடிக்கான பணியாக மாற்றி இருக்கிறோம். பணியில் விரைவு காட்டவில்லை.அதனால் காலதாமதமாகிறது. நமது நிர்வாக நிலைமை இது தான். அதிகாரிகளை அழைத்து பேசுகிறோம். பணிகளை விரைவுப்படுத்த சொல்கிறோம். அப்படியும் பணிகள் தாமதமாகி வருகிறது.
ஜான்குமார், பா.ஜ.,: அதற்கு தான் நமக்கு மாநில அந்தஸ்து தேவையாகிறது. நாம் நம்முடைய வருமானத்தை 100 சதவீதமாக உயர்த்த வேண்டும். அப்படி நடந்தால் அங்கு என்ன கொடுப்பது நாமே தனி மாநில அந்தஸ்தை வாங்கி விடலாம்.
முதல்வர்: கடந்த காலங்களில் மாநில வருவாய் குறைவாக இருந்தது. மத்திய அரசின் உதவித் தொகை 70 சதவீதம் வரை கொடுத்தது.
தற்போது அந்த நிலைமை இல்லை. மாநிலத்தின் வருவாய் தற்போது 61 சதவீதமாக உயர்ந்துள்ளது. இன்னும் அதிகரிக்க உள்ளது. அதே நேரத்தில் மத்திய அரசின் மானிய உதவி குறைந்து வருகிறது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மத்திய அரசு விதித்த ஐந்தாண்டு காலக்கெடு நிறைவு பெற உள்ளது.
அதற்கு மேலும் மத்திய அரசு காலக்கெடுவை நீட்டிக்குமா என்று தெரியவில்லை. இனி தான் தெரியும். எல்லா எம்.எல்.ஏ.,க்கள் போன்று ஸ்மார்ட் சிட்டி பணிகள் வேகமாக நடக்க வேண்டும் என்ற எனக்கும் உள்ளது.
அப்படி நடந்திருந்தால் ரூ.1,200 கோடிக்கும் அதிகமா பணிகள் நடந்திருக்கும். தற்போது ரூ.250 கோடிக்கான பணிகள் நடந்துள்ளது வேதனையாக உள்ளது.
இருப்பினும் அதிகாரிகளை அழைத்து பேசி பணிகளை விரைவுப்படுத்துவோம்.
நேரு, சுயே.,: ஸ்மார்ட் சிட்டி திட்டம் முடியப் போகிறது. இந்த திட்டத்தில் நடந்தபணிகள் குறித்து சட்டசபையில் தலைமை செயலர்வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
முதல்வர்: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வெட்ட வெளிச்சமான உண்மை இது தான்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்