பிராங்க்பர்ட்: நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள உக்ரைனுக்கு ரூ.1.29 லட்சம் கோடி கடனுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது. ரஷ்யா உடனான போரினால் உக்ரைன் ராணுவத்துக்கு அதிகளவில் செலவிட்டதால் அந்நாட்டின் பொருளாதாரம் கடந்தாண்டில் மட்டும் ஏறக்குறைய 30 சதவீதம் வரை குறைந்தது. இதனால் வரி வருவாயும் பெருமளவில் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனின் நிதி நிலையை தூக்கி நிறுத்தவும், போருக்கு பிந்தைய கட்டமைப்புகளை சீரமைக்கவும் உக்ரைனுக்கு ரூ.1.29 லட்சம் கோடி நிதி வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புக் கொண்டுள்ளது.
முந்தைய விதிகளின்படி, போரில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்குவதில்லை. ஆனால் தற்போது திருத்தப்பட்ட விதிகளின் கீழ் உக்ரைனுக்கு கடன் வழங்கப்பட உள்ளது. இந்த கடன் திட்டம் 4 ஆண்டுகள் செயல்படுத்தப்பட உள்ளது. முதல் 12 மாதம் முதல் 18 மாதங்கள் வரையிலான கால கட்டத்தில், மத்திய வங்கியில் பணத்தை அச்சடிப்பதன் மூலம், உக்ரைனின் நிதி பற்றாக்குறை மற்றும் நிதி செலவினங்களுக்கான அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக நாணய நிதியம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதில், மேலும் மீதமுள்ள கால கட்டத்தில், உக்ரைன் ஐரோப்பிய யூனியனில் உறுப்பினராகவும் மற்றும் போருக்கு பிந்தைய மறுசீரமைப்புக்கு உதவவும் பயன்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.