திருச்சி:தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் என டெல்டா விவசாயிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-2024க்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் நேற்றுமுன்தினம் தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளுக்கு, ரூ.14,000 கோடி பயிர்க்கடன், கரும்புக்கான ஊக்கத்தொகை உயர்வு உள்பட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டது. இதற்கு பலரும் பாராட்டு தெரித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் என டெல்டா விவசாயிகள் பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் அய்யாக்கண்ணு: தமிழ்நாடு அரசு விவசாயிகளை முன்னேற்ற வேண்டும் என விரும்புவது பட்ஜெட்டின் அறிவிப்புகள் வாயிலாக தெரிகிறது. பட்ஜெட்டில் காப்பீட்டுக்கு என ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கியிருப்பது சிறப்பு. இதை தனியார் வசம் ஒப்படைக்காமல் அரசே நேரடி பொறுப்பெடுத்து செய்ய வேண்டும். சிறுதானிய பயிர்கள் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் சிறப்பு மணடலங்கள் அறிவித்திருப்பது மாநிலத்தின் சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க செய்யும் நல்ல ஒரு அறிவிப்பாகும். அதோடு சிறுதானியங்களுக்கு நிலையான கொள்முதல் விலையை அறிவித்தால் சிறுதானிய உற்பத்தியில் விவசாயிகள் ஊக்கமுடன் ஈடுபடுவார்கள். சிறப்பான இந்த வேளாண் பட்ஜெட்டிற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், பட்ஜெட்டை தாக்கல் செய்த வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்துக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் விசுவநாதன்: வேளாண் மக்களின் துயர் துடைக்கும் சிறப்பான பட்ஜெட்டை வழங்கிய முதல்வர் மற்றும் வேளாண் துறை அமைச்சருக்கும் நன்றி. சன்னரக நெல்லுக்கு ஊக்கத் தொகை ரூ.100, பொது ரகத்துக்கு ரூ.70, கரும்புக்கு ஊக்கத் தொகையாக ரூ.195 மற்றும் கரும்பு சாகுபடி மேம்பாட்டுக்கு ரூ.10 கோடியும், நெல் கொள்முதல் திட்டத்துக்கு ரூ.100 கோடியும் ஒதுக்கீடு செய்திருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் சிறுதானிய பயிர்களை ஊக்குவிக்க ரூ.83 கோடி, எண்ணெய் வித்துப்பயிர் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.33 கோடி ஒதுக்கீடு செய்திருப்பது மாநிலத்தின் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு அடையச்செய்யும். தேங்காய்க்கு நிலையான விலை கிடைக்காமல் திண்டாடும் விவசாயிகளை மகிழ்விக்கும் வகையில் தென்னைக்கு ரூ.20 கோடி அறிவித்திருப்பதும் தென்னை விவசாயிகளுக்கு நல்ல செய்தியாக அமையும். மொத்தத்தில் சிறப்பான வரவேற்கத்தக்க பட்ஜெட்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் மாசிலாமணி: கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.2,850 ஏற்கனவே வழங்கப்பட்டு வந்தது. அதனை ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது டன் ஒன்றுக்கு ரூ.195 உயர்த்தி வழங்குவதாக நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளது. அதன்படி டன் ஒன்றுக்கு ரூ.3,045 கிடைக்கும். இது வரவேற்கதக்கது. கூட்டுறவு துறையின் வேளாண்மை கடன்களுக்காக கடந்தாண்டு தொகையை கூடுதலாக்கி 14 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தி அறிவித்திருப்பது மிக மிகப்பாராட்டத்தக்கது. வேளாண்மையை அடிப்படை வாழ்வாதாரமாக கொண்ட டெல்டா மாவட்டங்களில் திருச்சி முதல் நாகப்பட்டினம் வரை வேளாண் தொழில் மண்டலத்திற்காக ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்து இருப்பதை மகிழ்வுடன் வரவேற்கிறோம்.
இந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் தனபதி: வேளாண் இயந்திரங்கள், மதிப்புக்கூட்டு இயந்திரங்களை மானியத்தில் வழங்க ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கதக்கது. சிறந்த அங்கக விவசாயிக்கான `நம்மாழ்வார் விருது’ தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம். கிராமங்கள் தன்னிறைவு பெற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் சிறுதானிய மண்டலங்கள் விரிவாக்கம் செய்யப்படும் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. தமிழக அரசின் வேளாண்மைதுறை பட்ஜெட் விவசாயிகளை பாதுகாக்கும் பட்ஜெட்டாக உள்ளது. அவர்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்தும் பட்ஜெட்டாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.