விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூர் அன்புஜோதி ஆசிரமத்தில் மனித உரிமை மீறல் நடந்துள்ளதா என தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தியது. அப்போது மனநலம் பாதிக்கப்பட்ட தன் மனைவியை காணவில்லை என மேலும் ஒருவர் ஆணையத்திடம் புகார் தெரிவித்தார். கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஜூபின்பேபி, விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூரில் அன்பு ஜோதி என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வந்தார். பலர் மாயம், பலாத்காரம் புகாரின் பேரில் விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் விசாரித்து ஜூபின் பேபி உள்ளிட்ட 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தேசிய மகளிர் ஆணையம், தேசிய குழந்தைகள் நல ஆணையம், மாநில மகளிர் ஆணையம் ஆகியவை ஏற்கனவே விசாரணை நடத்தி முடித்த நிலையில் நேற்று முன்தினம் முதல் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. முதுநிலை கண்காணிப்பாளர் பாட்டீல் கேத்தன் பாலிராம் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 6 பெண்கள் உட்பட 20 பேரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். 2வது நாளாக நேற்று அன்பு ஜோதி ஆசிரமத்திற்கு தேசிய மனித உரிமைகள் ஆணைய குழுவினர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
ஆசிரமத்திற்கு அருகில் வசிப்பவர்களிடமும் விசாரணை நடத்தினர். பின்னர், வருவாய் துறை அதிகாரிகள், செஞ்சி டிஎஸ்பி பிரியதர்ஷினி ஆகியோரிடமும் விசாரித்தனர். அப்போது, தும்பூர் கிராமத்தைச் சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளி நாகராஜன், ‘ஆசிரமத்தில் 7 மாதத்துக்கு முன் சேர்க்கப்பட்ட மனநலம் பாதித்த 50 வயதான தனது மனைவி தேவியை காணவில்லை. மனைவியை பார்க்கவே ஆசிரம நிர்வாகி அனுமதிக்கவில்லை’ என புகார் தெரிவித்தார். இதுபற்றி சிபிசிஐடி போலீசார் விசாரிக்க ஆணைய குழுவினர் உத்தரவிட்டனர். இதனால் ஆசிரமத்தில் காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. இன்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணையை தொடர்கிறது.