சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு போலீசார் அடித்ததால் ஏற்பட்ட காயத்தால்தான் இருவரும் இறப்பு: குறுக்கு விசாரணையில் அரசு டாக்டர் உறுதி

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலையில் போலீசார் அடித்ததால் ஏற்பட்ட காயத்தால் தான் இருவரும் இறந்தனர் என்பதை குறுக்கு விசாரணையின் போது அரசு மருத்துவர் உறுதி செய்துள்ளார். சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரது கொலை வழக்கின் விசாரணை மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே காவலர்கள் ரேவதி, பியூலா மற்றும் நெல்லை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை குழுவிற்கு தலைமை வகித்த டாக்டர் செல்வமுருகன் உள்ளிட்ட பலர் ஆஜராகி சாட்சியம் அளித்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி என்.நாகலட்சுமி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது டாக்டர் செல்வமுருகனிடம் குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பில் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. ‘‘கொலையான இருவரது உடலில் பல இடங்களில் போலீசார் அடித்து தாக்கியதால் ஏற்பட்ட காயங்கள் இருந்தன. இதனால், ஏற்பட்ட பாதிப்பால் தான் இருவரும் இறந்தனர்’’ என்ற விபரத்தை கூறினார். கைதானவர்கள் தரப்பில் டாக்டரின் கருத்திற்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இறந்த இருவருக்கும் ஏற்கனவே காயங்கள் இருந்தன என மறுக்கப்பட்டது.
ஆனால், இந்த கருத்தை டாக்டர் முற்றாக மறுத்தார். ‘‘போலீசாரின் தாக்குதலால் ஏற்பட்ட காயங்களே இருவரின் இறப்புக்கு காரணம். சர்க்கரை வியாதி, ரத்தக் கொதிப்பு, கல்லீரல் மற்றும் நுரையீரல் பாதிப்பிற்கும் உடல் பருமனுக்கும் தொடர்பு உள்ளது என குறிப்பிட்டு கூற முடியாது.

அதிகப்படியான ரத்தப்போக்கை ஏற்படுத்துகின்ற காரணத்தை தான் இறப்பிற்கான காரணமாக கூற முடியும். காயங்களின் ஆறும் தன்மையை வைத்து காயங்கள் தோராயமாக எப்போது ஏற்பட்டிருக்கும் என்று கூற முடியும். ஆசன வாயின் வெப்பநிலை மற்றும் அறையின் வெப்பநிலையை வைத்து இறந்த நேரத்தை கணக்கிட முடியும். கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் இருந்து நெல்லை மருத்துவமனைக்கு வந்த நேரம் கணக்கிடப்பட்டது. நான் பிரேத பரிசோதனை செய்த போது இறந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தவர்களோ, விபரமோ, ஆவணங்களோ எதுவும் என்னிடம் இல்லை’’ என்ற விபரத்தை தெரிவித்தார். இதையடுத்து மேலும் குறுக்கு விசாரணைக்காக மார்ச் 28க்கு வழக்கு தள்ளி வைக்கப்பட்டது. அன்றைய தினமும் டாக்டர் செல்வமுருகனிடம் குறுக்கு விசாரணை நடக்க உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.