ஊடகவியலாளர்கள், யூடியூபர்கள், நடுநிலையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் உள்ளிட்டோர் பணம், பரிசுப் பொருட்களை வாங்கிக் கொண்டு வேலை செய்ததாக மதன் ரவிச்சந்திரன் ஸ்டிங் ஆபரேஷன் நடத்தி வீடியோக்கள் வெளியிட்டார். இதில் பலரது முகங்கள் அம்பலமாகின. குறிப்பாக ஆதன் தமிழ் யூடியூப் சேனலின் நெறியாளர் மாதேஷ் முக்கியமான நபராக வெளிப்பட்டார். அவரை வைத்து பலர் சிக்க வைக்கப்பட்டது தெரியவந்தது.
நெறியாளர் மாதேஷ்
இதனால் மாதேஷ் மீது தமிழர்கள் வைத்திருந்த நடுநிலையான எண்ணங்கள் சுக்கு நூறாக உடைந்தன. மதன் ரவிச்சந்திரன் ஸ்டிங் ஆபரேஷனில் சிக்கிய மற்றவர்கள் தங்களது செயலை நியாயப்படுத்தி பேசி வந்த நிலையில், மாதேஷ் வெளியிட்ட வீடியோ பெரிதும் சங்கடப்பட வைத்துள்ளது. ஏனெனில் அதில் அவர் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டிருந்தார். சில ஆண்டுகளுக்கு பின்னர் தனது மகன் ஸ்டிங் ஆபரேஷன் வீடியோக்களை பார்த்தால் என்ன நினைப்பார்? என வருத்தப்பட்டார்.
மன்னிப்பு கேட்கும் வீடியோ
மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் நேர்மையான, நடுநிலையான நெறியாளராக நிரூபித்து காட்டுவேன் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த வீடியோவிற்கு கலவையான விமர்சனங்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. மாதேஷ் மன்னிப்பு கேட்டால் தமிழர்கள் மன்னித்து விடுவார்களா? என்றும், பாவம் அவர், இன்னொரு வாய்ப்பு கொடுத்தால் தான் என்ன? என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
யார் இந்த மாதேஷ்?
மாதேஷை பொறுத்தவரை எந்த ஒரு சித்தாந்ததையும் தூக்கி பிடித்தவராக பார்க்கப்படவில்லை. அனைத்து தரப்பினரிடமும் விவாதங்கள் செய்துள்ளார். பேட்டிகள் எடுத்துள்ளார். நட்பு பாராட்டி வந்துள்ளார். ஆனால் தமிழனத்திற்கு எதிரான, திராவிட அரசியலுக்கு எதிரான நபர்களை பிரபலப்படுத்தி விட்டது தான் விமர்சனத்திற்கு ஆளானது. அந்த வகையில் மாதேஷ் மீதான கோபம் இருக்கத் தான் செய்யும்.
சாமானியர்கள் உருக்கம்
தற்போது தான் செய்த தவறை மாதேஷ் ஒப்புக் கொண்டு விட்டார். இதன்மூலம் தவறு செய்ததை உணர்ந்திருக்கிறார். திருந்தி வாழ வாய்ப்பு கேட்கிறார். இது சாமானியர்கள் மத்தியில் ஒருவித அனுதாபத்தை ஏற்படுத்தி இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. இனி இவரை விட்டு விடுவோம். தைரியமாக தன்னை ஒப்புக் கொண்டவர்களிடம் எச்சரிக்கையாக இருப்போம்.
தமிழர்கள் மன்னிப்பார்களா?
அவர்களின் கருத்தியலை, விவாதத்தை நன்கு ஆராய்ந்து அணுகுவோம் என்ற நிலைப்பாட்டை பலரும் முன்வைக்கின்றனர். இந்நிலையில் மாதேஷிற்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தாலும் தமிழர்கள் மத்தியில் மீண்டும் மீண்டும் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் மக்கள் தொடர்ந்து ஏமாற மாட்டார்கள்.
வாசிப்பு அவசியம்
ஒட்டுமொத்தமாக நெறியாளர் என்ற நடுநிலையான பிம்பத்தை உடைத்தெறியும் அளவிற்கு மாதேஷ் விவகாரம் சென்றுள்ளது. எனவே நெறியாளர்கள் அனைத்து வித கருத்தியலையும் படித்து தெளிந்தவர்களாக இருக்க வேண்டும். பெரியாரியம், அம்பேத்கரியம், மார்க்சியம், வலதுசாரி, பெரியார் எதிர்ப்பு, தமிழ் தேசியம் என பலதரப்பட்ட விஷயங்களை கற்று தெளிய வேண்டும்.
இவற்றின் மீதான வாசிப்பு அதிகமிருந்தாலே சிறந்த நெறியாளராக வர முடியும். மக்களுக்கான அரசியலை பேச முடியும். பணத்திற்கு விலை போகாத நிலை உண்டாகும். இனி வருங்காலங்களில் தமிழ் சமூகம் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.