பாஜக – அதிமுக கூட்டணி தொடர்பான பரபரப்பான கருத்தை தெரிவித்திருந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திடீர் பயணமாக இன்று காலை டெல்லி செல்கிறார்.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் பாஜகவினை தமிழகத்தில் வலுப்படுத்தும் வகையில் தமிழக அரசியல் களத்தில் தினம் தினம் வெவ்வேறு வகையில் காய் நகர்த்தி வருகின்றார். சில நாட்களாக பாஜகவில் இருந்த பல நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தது மட்டுமில்லாமல் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அதிருப்தி ஏற்படுத்தியும் அவர் மீது கடுமையாக குற்றம்சாட்டியும் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அமைந்தகரையில் நடைபெற்ற பாஜக மாநில மற்றும் அணி பிரிவின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெரும் சர்ச்சையாக கூட்டணி நிலைப்பாடு குறித்தும் பேசியது, அதிமுக vs பாஜக நிர்வாகிகள் இடையே வார்த்தைக்கு வழிவகுத்துள்ளது.
அண்ணாமலை அந்தக் கூட்டத்தில் பேசுகையில், ”திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க பாஜக விரும்பவிலை. யாருக்கும் சலாம் அடித்து இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு பேசவேண்டிய அவசியம் இல்லை. எனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளேன். இது தொடர்பாக விரைவில் முடிவினை அறிவிப்பேன்” என பேசி இருந்தார்.
ஆனால் அடுத்த சில நாட்களுக்குள் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, கூட்டணி தொடர்பான முடிவினை தேசிய தலைமை தான் அறிவிக்கும். ஆனால் தேசிய தலைமையிடம் எனது கருத்தை தெரிவிப்பேன் என்றும், எந்த கட்சியினையும் நான் குறை செல்லவில்லை என்றும் தெரிவித்து இருந்தார். முன்கூட்டியே பாஜக மாநில நிர்வாகிகள் ஒரு சிலர் அண்ணாமலைக்கு எதிராக புகார்களை தேசிய தலைமைக்கு ரகசியமாக தட்டிவிட்டுள்ளனர்.
இருந்தபோதிலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அரசியல் நிலவரம், பாஜக வளர்ச்சி குறித்து பேச வரும் 26-ஆம் தேதி பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் நேரம் கேட்டு இருந்த நிலையில் திடீர் பயணமாக இன்று காலை அண்ணாமலை டெல்லி சென்று அங்கு மோடி, அமித்ஷா, ஜே.பி. நட்டாவினை சந்திக்க உள்ளதால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அதே நேரத்தில் இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் டெல்லி செல்ல உள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM