விழுப்புரம்: காப்பகத்தில் இருந்த ஆதரவற்றவர்கள் காணாமல் போனது, பாலியல் சித்திரவதை, போதை மருந்து கொடுத்தது உள்ளிட்ட புகார்களில் சிக்கியிருக்கும் அன்புஜோதி ஆசிரமம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் குழுவினர் 3 நாள் விசாரணையை நேற்று தொடங்கினர்.
விழுப்புரம் அருகே குண்டலபுலியூரில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டவர்களில் சிலர் காணாமல் போனதாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த மாதம் 10-ம் தேதி போலீஸ், வருவாய்த் துறையினர் நடத்திய விசாரணையில் இந்த ஆசிரமம் உரிய அனுமதியின்றி இயங்கி வருவது தெரியவந்தது.
மேலும் ஆசிரமத்தில் இருந்த மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அடித்து துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது, 16 பேர் வரை காணாமல் போயிருப்பது என அடுக்கடுக்கான பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது.
இதையடுத்து ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், ஆசிரம பணியாளர்கள் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
தேசிய மகளிர் ஆணையம், தேசிய குழந்தைகள் நல ஆணையம், மாநில மகளிர் ஆணையம் உள்ளிட்டவைகள் ஏற்கெனவே விசாரணை நடத்தி முடித்துள்ள நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் தனது விசாரணையை நேற்று தொடங்கியது.
ஆசிரமத்தில் மனித உரிமை மீறல் நிகழ்ந்துள்ளதாக கிடைத்த புகாரின் பேரில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்க தொடங்கி இருக்கிறது.
இந்த விசாரணையில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் புலனாய்வு பிரிவு முதுநிலை கண்காணிப்பாளர் பாட்டீல் கேத்தன் பாலிராம் தலைமையில் துணைக் கண்காணிப்பாளர் மோனியா உப்தல், ஆய்வாளர் சந்தோஷ்குமார், பிஜூ, ஏக்தா பாதுஷா உள்ளிட்ட 5 பேர் அடங்கிய குழுவினர் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழுவினர், அன்பு ஜோதி ஆசிரம நிர்வாகிகளால் பாதிக்கப்பட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 6 பெண்கள், 14 ஆண்கள் என மொத்தம் உள்ள 20 பேரிடமும் நேற்று தனித்தனியாக விசாரணை நடத்தி அவர்கள் அளித்த வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டனர்.
பின்னர் விழுப்புரம் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு சென்று அங்கு அன்பு ஜோதி ஆசிரம வழக்கை விசாரணை நடத்தி வரும் விழுப்புரம் சிபிசிஐடி கூடுதல் கண்காணிப்பாளர் கோமதி, சிபிசிஐடி ஆய்வாளர்கள் ரேவதி, தனலட்சுமி உள்ளிட்டோரிடம் அன்பு ஜோதி ஆசிரம வழக்கில் இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்கள், குற்றப்பதிவுகள் குறித்து விசாரணை நடத்தினர்.
இன்று ஆசிரமத்துக்கு சென்று ஆய்வு செய்கின்றனர். இக்குழுவின் விசாரணை நாளை மறுநாள் (மார்ச் 24) நிறைவுபெறும் என்று போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.
ஜாமீன் மனு: இதற்கிடையே, இந்த வழக்கில் கைதான ஆசிரம நிர்வாகிகள் ஜுபின் பேபி, அவரது மனைவி மரியா உள்பட 7 பேர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதில், தங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு எந்தவொரு அடிப்படை முகாந்திரமும் இல்லை. எனவே தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்என கோரியுள்ளனர்..