CM Stalin About Krishnagiri Youth Muder Case: தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. பட்ஜெட் மீதான விவாதம் இன்று முதல் நடைபெறுகிறது. இன்றைய நிகழ்வின் தொடக்கத்தில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாரிமுத்து, தங்கவேலு, உபயதுல்லா, சீனிவாசன் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு அவை உறுப்பினர்கள் இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரபல பாடகி வாணி ஜெயராம் மறைவிற்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதை தொடர்ந்து, கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்த இளைஞர் நடுரோட்டில் காதலியும், தந்தையால் கொலை செய்யப்பட்ட விவகாரம் மீது எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
அந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,”கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் காவல் நிலைய பகுதியில் கடந்த மார்ச் 21ஆம் தேதி மதியம் ஒரு மணியளவில் கிடாம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெகன் என்பவர், சரண்யா என்பவரை காதல் திருமணம் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சரண்யாவின் தந்தையான அதிமுக கிளை செயலாளர் சங்கர், ஆத்திரத்தில் தனது உறவினர்கள் மூன்று பேருடன் சேர்ந்து ஆயுதத்தால் தாக்கி ஜெகனுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இந்த சம்பவத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சங்கரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், காவல்துறையினரின் விசாரணையில் சங்கர் அதிமுக கிளை செயலாளராக இருப்பதாகவும் தகவல் தெரியவந்துள்ளது. எனினும் இதுபோன்ற கொலை சம்பவங்களை தடுக்க திமுக ஆட்சியில் தொடர்ந்து காவல்துறை சார்பாகவும் மாவட்ட ஆட்சியர் வாயிலாகவும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சமூக நீதி மண்ணான தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவங்களின் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து கட்சிகளும் மனிதநேயத்தை பேணி காக்க வேண்டும்” என பேசி அமர்ந்தார். இதற்கிடையே கொலையாளி சங்கர் அதிமுக கிளை செயலாளர் என கூறியதற்கு அதிமுக தரப்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் முனுசாமி, கோவிந்தசாமி, அருண்மொழி தேவன் உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
உடனே குறுக்கிட்டு பேசிய அவை முன்னவரான துரைமுருகன்,”காவல்துறையின் விசாரணையில் மேற்கண்ட தகவல் கூறப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாளை மாற்று கருத்து வரும் எனில் அந்தத் திருத்தம் ஏற்றுக்கொள்ளப்படும். மேலும், அது மீண்டும் பேரவையில் வாசிக்கப்படும்” என தெரிவித்தார். இதனால் சிறிது நேரம் பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.