இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த சில மாதங்களுக்குப் பிறகு, இப்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா தொற்று எண்ணிக்கைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. அந்தவகையில் மார்ச் 23 அன்று, கோவிட் தொற்று எண்ணிக்கை இன்னுமும் அதிகரித்துள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் 1133 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கோவிட் காரணமாக நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இதனுடன், செயலில் உள்ள கொரோனா தொற்று எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. செவ்வாயன்று, 467 பேருக்கு கொரோனா அதிகரித்துள்ளன, அதன் பிறகு செயலில் உள்ள தொற்றுகளின் எண்ணிக்கை 7,026 ஆக அதிகரித்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 662 பேர் கொரோனாவால் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது நாட்டின் மீட்பு விகிதம் 98.8 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.19 சதவீதமாகவும் உள்ளது. சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தின்படி, நாடு தழுவிய தடுப்பூசி பிரச்சாரத்தின் கீழ் இதுவரை 220.65 கோடி டோஸ் கோவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா கோவிட் அப்டேட்
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், மாநிலத்தில் 334 புதிய தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில், கொரோனாவால் ஒருவர் உயிர் இழந்தார். மார்ச் மாதத்தில் மொத்தம் 10 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை, மகாராஷ்டிராவில் மொத்தம் 81,40,479 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,48,430 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 79,90,401 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கோவிட் அப்டேட்
தமிழ்நாட்டிலும் மெல்ல மெல்ல தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. பிப்ரவரி மாத தொடக்கத்தில் 34 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது. தற்போது மாநிலம் முழுவதும் 480 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நேற்று ஒரே நாளில் 83 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
டெல்லியில் கோவிட் அப்டேட்
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நகரத்தின் பாசிட்டிவ் தொற்று விகிதம் 5.08 சதவீதம் ஆகும். அதே நேரத்தில், செயலில் உள்ள தொற்றுகளின் எண்ணிக்கை 292 ஆகும், அவர்களில் 197 பேர் வீட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 62 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தலைநகர் டெல்லியில் 20,08,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 26,524 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
பிரதமர் மோடி உயர்மட்டக் கூட்டத்தை நடத்தினார்
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதைக் கண்டு, மத்திய அரசு உஷார்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறார். இதனிடையே பிரதமர் மோடி புதன்கிழமை உயர்மட்டக் கூட்டத்தை அழைத்தார், மேலும் கோவிட் -19 இன்னும் முடிவடையவில்லை என்று கூறினார்.
பிரதமர் மோடி அலுவலகத்தின் அறிக்கையின்படி, நாட்டில் கோவிட் 19 மற்றும் இன்ஃப்ளூயன்ஸாவின் நிலைமை மற்றும் அதைச் சமாளிப்பதற்கான சுகாதார உள்கட்டமைப்பின் தயார்நிலை குறித்து ஆய்வு செய்ய பிரதமர் மோடி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.
மேலும் கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் 20 முக்கிய முருந்துகள், 12 இதர மருந்துகள், 8 இடையக மருந்துகள் மற்றும் இன்ஃப்ளூயன்சா காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான மருந்தின் கையிருப்பு குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக பிரதமரிடன் இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. நாட்டில் கடந்த சில நாட்களாக எச்1என்1 மற்றும் எச்3என்2 வைரஸ் மூலம் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் அது குறித்தும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் கொரோனா பரவலை வழக்கமான அடிப்படையில் கண்காணிப்பது அவசியம் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார். மருத்துவமனைகளில் போதிய அளவில் மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், போதிய அளவில் படுக்கைகள மற்றும் மருத்துவப் பணியாளர்கள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய மோடி, சிகிச்சைக்கான ஒத்திகைகளை அடிக்கடி மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளார்.