கிருஷ்ணகிரியில் நடந்த ஆணவக் கொலை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டப் பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதில், பட்டப் பகலில் கொடூரமாக வெட்டிக் கொலை நடந்துள்ளது. இதற்கு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஸ்டாலின் விளக்கம்
உடனே முதல்வர் விளக்கம் அளிப்பார் என்று சபாநாயகர் அப்பாவு குறிப்பிட்டார். பின்னர் பேசிய
, கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் காவல் நிலைய சரகம் கிட்டம்பட்டியை சேர்ந்த ஜெகன் (28) என்பவர் மார்ச் 21 அன்று சுமார் 1.30 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தில் கே.ஆர்.பி அணை சாலையில் சென்று கொண்டிருந்தார்.
கிருஷ்ணகிரி ஆணவக் கொலை
அப்போது முழுக்கான் கோட்டை கிராமத்தை சேர்ந்த சங்கர் (அதிமுகவின் கிளை செயலாளர்) உள்ளிட்ட மூவர் ஜெகனை வழிமறித்து ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பான காவேரிப்பட்டினம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
காதல் திருமணம்
அதில், கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு பயிலும் சங்கரின் மகள் சரண்யாவை டைல்ஸ் பதிக்கும் தொழிலாளியான ஜெகன் காதலித்து வந்தது தெரியவந்தது. பெண் வீட்டாரின் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு அழைத்து சென்று 26.1.2023 அன்று கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த சங்கர் உள்ளிட்டோர் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குற்றவாளிகள் கைது
தற்போது சங்கர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திமுக ஆட்சியில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் உரிய நடவடிக்கைகளும், விழிப்புணர்வும் காவல்துறையினர் சார்பிலும், மாவட்ட நிர்வாகம் சார்பிலும் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன.
முதல்வர் கோரிக்கை
சமூக நீதி காக்கும் மண்ணான தமிழ்நாட்டில் அரசியலுக்கு அப்பாற்பட்டு மனித நேயத்தை பேணும் வகையில் இதுபோன்று நடைபெறாமல் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
சங்கரின் வாக்குமூலம்
கிருஷ்ணகிரி ஆணவக் கொலை விவகாரத்தை பொறுத்தவரையில் இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் தான். இருப்பினும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளம்பெண்ணின் தந்தை கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மகிளா நீதிமன்றத்தில் சரணடைந்த சங்கர், தனது மகளை கஷ்டப்பட்டு படிக்க வைத்தேன்.
நல்ல இடத்தில் வரன் பார்த்து திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டேன். ஆனால் அவர் வேறு ஒருவரை காதலித்தார். அதை நான் எச்சரித்தேன். நல்ல இடத்தில் நிச்சயமும் செய்து வைத்தேன். ஆனால் அவர் காதலித்த நபரையே திருமணம் செய்து கொண்டார். அந்த ஆத்திரத்தில் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார்.