`பிறந்தநாள் கிஃப்ட்’ – சிறை கைதிகளுக்கு ரூ.5 கோடி வழங்க விருப்பம் தெரிவித்த சுகேஷ் சந்திரசேகர்!

டெல்லி தொழிலதிபர் மனைவியை மிரட்டி ரூ.200 கோடிக்கும் அதிகமாக பணம் பறித்தது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திகார் சிறையில் இருந்தபோது சிறை அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதோடு சிறைக்கு பாலிவுட் நடிகைகள் மற்றும் மாடல் அழகிகளை வரழைத்து அவர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் வழங்கி வந்தார் என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது. இது குறித்து தெரியவந்தவுடன் சுகேஷ் சந்திரசேகர் வேறு சிறைக்கு மாற்றப்பட்டார்.

சுகேஷ் சந்திரசேகர்

தற்போது தன்னுடன் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு உதவ சுகேஷ் முன்வந்துள்ளார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள பல கைதிகள் ஜாமீன் உத்தரவாத தொகை கட்டமுடியாமல் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஜாமீன் கிடைத்தும் வெளியில் வர முடியாத நிலை இருந்து வருகிறது. கைதிகளின் குடும்பத்தினர் வறுமையில் இருப்பதால் அவர்களாலும் பிணையத்தொகை செலுத்த முடியாது. இதனால் ஏராளமான கைதிகள் தொடர்ந்து பல ஆண்டுகளாக விசாரணை கைதிகளாக இருக்கின்றனர். அவர்களின் குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கு உதவ கைதிகள் நல நிதி ஒன்று இருக்கிறது. இந்த நிதியில் இருந்து கஷ்டப்படும் கைதிகள் குடும்பத்திற்கு உதவி செய்யப்பட்டு வருகிறது.

தற்போது டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ், ஜாமீன் கிடைத்தும் வெளியில் வரமுடியாமல் கஷ்டப்படும் கைதிகளுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார். சுகேஷுக்கு வரும் 25-ம் தேதி பிறந்த நாள் ஆகும். தனது பிறந்த நாளை முன்னிட்டு கைதிகள் நல நிதிக்கு ரூ.5.11 கோடி கொடுக்க சுகேஷ் விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லி சிறைத்துறை அதிகாரிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். தனது வழக்கறிஞர் ஆனந்த் மாலிக் மூலம் இக்கடிதத்தை எழுதியிருக்கிறார். அதில், “ஏற்கனவே ஜாமீன் கிடைத்தும் பிணைத்தொகை கட்ட முடியாமல் இருந்த 400 கைதிகள் சிறையில் இருந்து வெளியில் வர உதவி செய்துள்ளேன். சிறையில் கைதிகளாக இருப்பவர்களின் குடும்பம் வெளியில் மிகவும் கஷ்டத்தை அனுபவிப்பதை நான் பார்க்கிறேன். பலர் வறுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து இருக்கின்றர்.

சுகேஷ்

அவர்களுக்கு என்னால் முடிந்த சிறிய உதவியை எனது உழைப்பில் கிடைத்த வருவாயில் இருந்து கொடுக்க விரும்புகிறேன். அதை ஏற்றுக்கொண்டால் மகிழ்ச்சியடைவேன். சிறையில் தினமும் கைதிகள் ஜாமீனில் வெளியில் செல்ல தேவையான பணத்தை கட்ட முடியாமலும், குடும்பத்திற்கு தேவையான பணத்தை அனுப்ப முடியாமலும் கஷ்டப்படுவதை பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது” என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சுகேஷ் கடிதத்திற்கு இன்னும் சிறைத்துறை பதிலளிக்கவில்லை

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.