திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்கவும், உடல் சூட்ைட தணிக்க கூடிய முலாம்பழம் 4 கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை ஆவதால் பொதுமக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. ஆண்டு தோறும் கோடை காலம் வந்து விட்டால் பொதுமக்கள் கோடை வெயிலில் இருந்தும் வெயிலின் தாக்கத்தால் உடல் நலத்திற்கு ஏற்படக்கூடிய தீங்கிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள கோடைகால பழங்களான தர்பூசணி பழம்,வெள்ளரிப்பிஞ்சு, இளநீர், நொங்கு, திராட்சை, வாட்டர் ஆப்பிள் போன்ற பழங்களை வாங்கி சாப்பிடுவர்.
கோடை வெயிலினால் தாக்கக்கூடிய அம்மை, மஞ்ச காமாலை, வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகளில் இருந்து இதுபோன்ற பழங்களை வாங்கி உட்கொண்டு உடல்நலத்தை பேணி காத்துக் கொள்வர். ஆனால் உடல் நலத்திற்கு மிக குளிர்ச்சி தரக்கூடிய இந்த முலாம்பழமானது அரிதாகவும் விலை உயர்ந்தும் பழக்கடைகளில் மட்டும் விற்பனையாகி வந்ததால் பொது மக்களுக்கு எட்டாத கனியாக இருந்தது. இந்த ஆண்டு 4 கிலோ 100 ரூபாய்க்கு விலை குறைவாக விற்பனையாகி வருவதால் இந்த பழங்கள் ரோட்டோர கடைகளில் வெள்ளரி, இளநீர், நுங்கு,தர்பூசணி பழம் இவைகளுக்கு போட்டியாக முலாம்பழம் இடம் பிடித்து விற்பனையாகி வருவதால் தினசரி ஒன்றை டன் பழங்கள் விற்பனையாகிறது.
மேலும் பொதுமக்களிடையே அதிக வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது என வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.வியாபாரி முருகன் கூறுகையில், சந்தைக்கு முலாம் பழங்கள் வந்து குவிந்துள்ளன. வியாபாரமும் அருமையாக உள்ளது. விலை நியாயமாக உள்ளது. இந்த முறை வாங்கிய பழங்கள் அனைத்தும் வேகமாக விற்று தீர்ந்து வருகிறது. வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து வியாபாரிகளுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் வியாபாரம் நல்ல முறையாக நடந்து வருகிறது என்று கூறினார்.