தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றதா திமுக அரசு, 80 சதவீதம் நிறைவேற்றி விட்டதாகக் கூறி மக்களை ஏமாற்று வருவதாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “தமிழகத்தின் நிதிநிலை தள்ளாடிகொண்டிருக்கிறது. ஆக்கப்பூர்வமான முறையில் வருமானத்தைப் பெருக்காமல், டாஸ்மாக் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயை அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர்.
திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளில், தமிழகத்தின் மது விற்பனை ரூ.45 ஆயிரம் கோடிக்கும் மேல் உயர்ந்துள்ளதுதான் அரசின் சாதனை. மேலும், மது விற்பனையை ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேல் உயர்த்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. இது வளர்ச்சியா, வீழ்ச்சியா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
திமுக ஆட்சியில் அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும், வெறும் அறிவிப்புகளோடு நின்றுவிடுகின்றன. ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு தனியார் வேலைவாய்ப்பு வழங்கப்படும், 3 லட்சம் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தேர்தலின்போது திமுக வாக்குறுதி அளித்தது.
இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேறவில்லை. இவ்வாறு எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல், 80 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது திமுக அரசு.
தமிழகத்தின் கடன் எவ்வளவு, வருமானமும், செலவும் எப்படி எல்லாம் மாறியுள்ளன ஆகியவை முக்கியமானவை. இது தொடர்பாக பட்ஜெட்டில் விரிவான தகவல்கள் இல்லை” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.