தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் பேச சபாநாயகர் அனுமதி அளித்ததால் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சபாநாயகரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தமிழக சட்டப்பேரவையில், ஆன்லைன் ரம்மி சட்டமசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதாவை மீண்டும் இன்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். மேலும் மசோதா தொடர்பான நீண்ட விளக்கத்தையும் அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் குறிப்பிட்டு முதலமைச்சர் பேசினார்.
அதைத் தொடர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஈஸ்வரன், அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம், பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், திமுக சார்பில் துரைமுருகன், பாமக சார்பில் ஜி,கே,மணி, விசிக சார்பில் ஆளூர் ஷாநவாஸ் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை வரவேற்று பேசினார்கள்.
அப்போது ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சபாநாயகரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். “அதிமுக சார்பில் நாங்கள் தான் இருக்கிறோம். எதிர்க்கட்சித் தலைவராக நான் இருக்கிறேன். அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம் பேசிவிட்டார். மற்றொரு வாய்ப்பு கொடுப்பது குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் யார் பக்கம் இருக்கிறார்களோ அவர்கள் தான் எதிர்க்கட்சி” என்றார்.
அதற்கு சபாநாயகர், “ஓ. பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்றோ, அதிமுக உறுப்பினர் என்றோ கூறவில்லை. உறுப்பினர் பேசுகிறார் என்று தான் கூறினேன்” என்றார். அதற்கு இபிஎஸ், ”எந்த அடிப்படையில் பேச அனுமதி வழங்கினீர்கள். சுமுகமாக சட்டமன்றம் நடைபெறும் போது குழப்பத்தை ஏற்படுத்துகிறீர்கள்” என்றார்.
சபாநாயகர், ”ஆன்லைன் சூதாட்ட மசோதா குறித்து பேசப்படும் போது வேறு விவகாரம் குறித்து பேச வேண்டாம். முன்னாள் முதலமைச்சர் என்ற அடிப்படையில் அவர் கூறும் போது அனுமதி வழங்கினோம்” என்றதும் அதிமுக உறுப்பினர்கள் இருகையை விட்டு எழுந்து வந்து கூச்சலிட்டனர். அதேசமயம் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் இருக்கையை விட்டு வெளியே வந்து முழக்கம் எழுப்பினார். இதனால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM