சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2015ம் ஆண்டு ஜனவரியில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்படி ஆண்களை விட 2 ஆயிரத்து 913 பெண் வாக்காளர்கள் கூடுதலாக இருந்தனர். 2016, செப்டம்பரில் வெளியிடப்பட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல்படி ஆண்களை விட 9 ஆயிரத்து 399 பெண் வாக்காளர்கள் கூடுதலாக இருந்தனர். 2017, அக்டோபரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் படி ஆண்களை விட 12 ஆயிரத்து 71 பெண் வாக்காளர்கள் கூடுதலாக இருந்தனர்.
2018, செப்டம்பரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் ஆண்களை விட 11 ஆயிரத்து 751 பெண் வாக்காளர்கள் கூடுதலாக இருந்தனர். 2019, மக்களவை தேர்தலின் போது வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்படி ஆண்களைவிட பெண் வாக்காளர்கள் 14 ஆயிரத்து 504 பேர் கூடுதலாக இருந்தனர்.
உள்ளாட்சி தேர்தலையொட்டி 2019, டிசம்பரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்படி ஆண்களை விட 14 ஆயிரத்து 704 பெண் வாக்காளர்கள் கூடுதலாக இருந்தனர். 2020 நவம்பரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் படி ஆண்களை விட 16 ஆயிரத்து 649 பெண் வாக்காளர்கள் கூடுதலாக இருந்தனர்.
2021, நவம்பரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்படி ஆண்களை விட 21 ஆயிரத்து 225 பெண் வாக்காளர்கள் கூடுதலாக இருந்தனர். 2022, நவம்பரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் படி ஆண்களை விட 20 ஆயிரத்து 39 பெண் வாக்காளர்கள் கூடுதலாக இருந்தனர். கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 11 லட்சத்து 76 ஆயிரத்து 271 வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண்கள் 5 லட்சத்து 98 ஆயிரத்து 473, ஆண்கள் 5 லட்சத்து 77 ஆயிரத்து 743, பிற பாலினத்தவர் 55 நபர்கள் ஆவர்.
ஆண்களை விட 20 ஆயிரத்து 730 பெண் வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர். அதிகபட்சமாக திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் 5 ஆயிரத்து 995 பெண் வாக்காளர்கள், ஆண் வாக்காளர்களை விட கூடுதலாக உள்ளனர். காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் 5 ஆயிரத்து 189 பெண் வாக்காளர்கள், சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் 5 ஆயிரத்து 165 பெண் வாக்காளர்கள், மானாமதுரை தொகுதியில் 4 ஆயிரத்து 381 பெண் வாக்காளர்கள், ஆண் வாக்காளர்களை விட கூடுதலாக உள்ளனர். ஏழு ஆண்டுகளில் பெண் வாக்காளர் எண்ணிக்கை சுமார் ஆறு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது.
முந்தைய ஆண்டுகளில் திருப்பத்தூர் மற்றும் சிவகங்கை தொகுதிகளில் பெண் வாக்காளர் எண்ணிக்கை கூடுதலாக இருந்தது. இந்நிலையில் தற்போது காரைக்குடி, மானாமதுரை உள்ளிட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளிலுமே பெண் வாக்காளர்களே கூடுதலாக உள்ளனர்.