திருட்டு வழக்கில் சிக்கிய மனைவியை ஆசிட் வீசி கொல்ல முயற்சி… நீதிமன்ற வளாகத்தில் கணவனுக்கு தர்ம அடி..!

கோவை நீதிமன்ற வளாகத்தில் மனைவி மீது ஆசிட் வீசி கணவர் கொல்ல முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. ஆசிட் வீசியவரை  மடக்கிப்பிடித்த வழக்கறிஞர்கள் வெளுத்தெடுத்த  பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி..

கோவை ராமநாதபுரம் காவேரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவா. இவரது மனைவி கவிதா. இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த 2016 ஆம் ஆண்டு கவிதா, பேருந்தில் பயணித்த போது கூட்ட நெரிசலை பயன்படித்தி பெண் பயணி ஒருவரிடம் இருந்து 10 சவரன் தங்க சங்கிலியை பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமினில் வெளியேவந்த நிலையில் இது தொடர்பான வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது.

இந்த வழக்கில் ஆஜராவதற்காக கவிதா நீதிமன்றத்திற்கு வாய்தாவிற்கு வந்திருந்தார்.‘அவரைப் பின் தொடர்ந்து வந்த கணவர் சிவா , நீதிமன்ற வளாகத்தில் வைத்து கவிதாவிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் சிவா கையோடு எடுத்து வந்திருந்த பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த சல்பர் ஆசிட்டை கவிதாவின் முகம் மற்றும் உடல்மேல் பரவலாக வீசினார்.

இதில் கவிதா பலத்த காயம் காயமடைந்தார். இதனைக் கண்டு அக்கம் பக்கத்தில் இருந்த வழக்கறிஞர் தடுக்க முற்பட்டுள்ளனர். வழக்கறிஞர்கள் சிலர் மீதும் ஆசிட் பட்டதில் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த வழக்கறிஞர்கள் ஆசிட் வீசிய சிவாவை மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

அப்போது சிலர் அவரை போலீசிடம் ஒப்படைக்க விடாமல் தடுத்து இழுத்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது

80 சதவீத காயமடைந்த கவிதா உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். பட்டப் பகலில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் நீதிமன்ற வளாகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

முதற்கட்ட விசாரணையில் பல்வேறு திருட்டு வழக்கில் சிக்கியதால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கவிதா தனது இரு குழந்தைகளையும், கணவரையும் பிரிந்து தனித்து வாழ்ந்து வந்துள்ளார். அவரது நடவடிக்கை பிடிக்காமல் கவிதாவை சிவா அடிக்கடி எச்சரித்து வந்த போதும் கவிதா அதனை பொருட்படுத்தவில்லை என கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக திருட்டு வழக்கில் ஆஜராக நீதிமன்றம் வந்திருந்த கவிதாவை பின் தொடர்ந்து வந்து கணவர் சிவா ஆசிட் வீசியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது

பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலில் மறைத்து ஆசிட்டை எடுத்து வந்ததால் நீதிமன்ற வாயிலில் பாதுகாப்புக்கு இருந்த காவலர்களுக்கு சந்தேகம் ஏற்படவில்லை என்று தெரிவித்த காவல் உயர் அதிகாரிகள் தொடர்ந்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர்

அண்மையில் கோவை நீதிமன்ற வாசல் அருகே ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது நீதிமன்றத்தின் வளாகத்திற்குள் ஆசிட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.