2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசிய கருத்துக்கு எதிராக, சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. பின்னர் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் எம்.பியுமான ராகுல் காந்தி, “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப்பெயர் இருப்பது எப்படி?” எனப் பேசியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாகவும் பாஜகவைச் சேர்ந்த குஜராத் முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏவுமான புர்னேஷ் மோடி அவதூறு வழக்கு ஒன்றைத் தொடுத்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை சூரத் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆஜராகிய ராகுல், தன் தரப்பு வாதத்தை வைத்தார். இந்த விவகாரத்தில், தனக்கு எந்தவித உள்நோக்கமும் இல்லை என தனது தரப்பு வாதத்தின்போது ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இருதரப்பு வாதங்களைக் கேட்டறிந்த சூரத் மாவட்ட நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஹெ.ஹெவர்மா, இந்த வழக்கில் இன்று (மார்ச் 23) தீர்ப்பளிப்பதாக கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சூரத்தில் நீதிமன்ற தீர்ப்புக்காக இன்று ராகுல் காந்தி நேரில் ஆஜராஜானர். இந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்டது.
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 499 மற்றும் 500ன்படி ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனையான 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 15,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது என நீதிபதி அறிவித்தார். மேலும் அவருக்கு 30 நாட்கள் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் அனுமதி வழங்கியது.
நீதிமன்றம் வழங்கிய தண்டனைக்குப் பிறகு ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “என்னுடைய மதம் அகிம்சை மற்றும் உண்மையை அடிப்படையாகக் கொண்டது. உண்மை என் கடவுள். அகிம்சை அதை அடைவதற்கான வழிமுறை” என்ற மகாத்மா காந்தியின் கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
मेरा धर्म सत्य और अहिंसा पर आधारित है। सत्य मेरा भगवान है, अहिंसा उसे पाने का साधन।
– महात्मा गांधी
— Rahul Gandhi (@RahulGandhi) March 23, 2023
ராகுலுக்கு வழங்கப்பட்டிருக்கும் தண்டனையை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM