50 வயது நபருக்கு 33 ஆண்டு கடுங்காவல்: போக்சோ வழக்கில் மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா அதிரடி

புதுக்கோட்டை அருகே உள்ள கைக்குறிச்சி விஜயரகுநாதபுரம் பகுதியை சேர்ந்த சின்னையா என்பவரின் மகன் கணேசன். இவருக்கு வயது 50. இவர் 6.6.2022 அன்று காலை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 14 வயது சிறுமியின் வீட்டிற்குள், யாரும் இல்லாத பொழுது அத்துமீறி உள்ளே நுழைந்து சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். 

இதில் பயந்து போன 14 வயது சிறுமி தாயிடம் நடைபெற்ற சம்பவத்தை கூறவே பதறிப்போன சிறுமியின் தாய் அன்று இரவு 9 மணி அளவில் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். இந்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கலைவாணி வழக்கு பதிவு செய்து விசாரித்தார்.

7.6 2022 இரவு 8 மணி அளவில் கணேசனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலை இந்த வழக்கானது புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பை வாசித்த மகிளா நீதிமன்ற நீதிபதி டாக்டர் ஆர். சத்யா 50 வயது கணேசன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கினார். 

மேலும் சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததற்காக 10 ஆண்டு கால கடுங்காவல் தண்டனையும் 50,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி டாக்டர் ஆர். சத்யா சிறுமியிடம் அத்துமிறலில் ஈடுட்ட முயன்ற  குற்றத்திற்காக அவருக்கு 20 ஆண்டு கால கடுங்காவல் சிறை தண்டனையும் 1,50,000 ரூபாய் அபராதமும் விதித்தார். 

இதுமட்டுமின்றி, சிறுமியை தகாத வார்த்தைகளில் பேசியதற்காக 3 ஆண்டு கால சிறை தண்டனையும் 20,000 ரூபாய் அபராதம் விதித்தார். மேலும் நீதிபதி டாக்டர் ஆர். சத்யா சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினார். மேலும் இந்த வழக்கில் சிறப்பான வாதங்களை எடுத்து வைத்த அரசு தரப்பு வழக்கறிஞர் யோகமலர், வழக்கு பதிவு செய்த 8 மாதத்தில் சாட்சிகளை முறையாக நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி குற்றவாளிக்கு விரைவாக தண்டனை பெற பணியாற்றிய அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கலைவாணி, நீதிமன்ற காவலர் கார்த்திகா ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தார் மகிளா நீதிமன்ற நீதிபதி டாக்டர் ஆர். சத்யா. இதை அடுத்து தண்டனை பெற்றவரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க காவலர்கள் அழைத்துச் சென்றனர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.