கோயம்புத்தூரில் கத்தி மற்றும் ஆயுதங்களுடன் மிரட்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டதாக இரண்டு கும்பல்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் இரண்டு பேர் பழிக்கு பழியாக கொலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இந்த தகவல் தெரிய வந்தது. இதையடுத்து மாநகர போலீசார் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட பெண் உள்பட 18 பேரை கைது செய்தனர்.
இந்த சம்பத்தில், ஏற்கனவே வீடியோ வெளியிட்டு கைதான கவுதம் என்பவருடன் தொடர்பில் இருந்த சுகந்தாராம் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கத்தியுடன் வீடியோவை வெளியிட்டு இருந்தார்.
இதைத் தொடர்ந்து போலீசார் அவர் மீது ஆயுத தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தற்போது தலைமறைவாக உள்ள சுகந்தாராமை தேடி வருகின்றனர். இதுபோன்று ஆயுதங்களுடன் வீடியோ வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.
அந்த எச்சரிக்கையையும் மீறி சுகந்தாராம் கத்தியுடன் வீடியோ வெளியிட்டுள்ளதால் போலீசார் அவர் மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.